×

அதிக திறன்கொண்ட பட்டாசுகள் வெடிப்பதை தடுக்க நடவடிக்கை

கடலூர், அக். 23: மாசற்ற தீபாவளிக்கு அழைப்பு விடுத்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிக டெசிபல் அளவு திறன்கொண்ட பட்டாசுகள் வெடிப்பதை தடுக்கும் பொருட்டு முக்கிய குடியிருப்பு பகுதிகளில் சப்தத்தை அளவிடும் கருவிகள் கொண்டு கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக கடலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி பொறியாளர் சேரலாதன் தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற, பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் உயிரினங்களை பாதிக்காத அளவில் தீபாவளியை கொண்டாட வேண்டும். குறைந்த ஒலி திறன் கொண்ட பட்டாசுகளையே பயன்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாசற்ற தீபாவளியை இலக்காகக் கொண்டு இந்த ஆண்டு முக்கிய இடங்களிலும், குடியிருப்புகளிலும் அதிக சப்தம் கொண்ட பட்டாசுகள் வெடிப்பதை தடுக்கும் பொருட்டு சப்தத்தை அளவிடும் கருவிகள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் மாசுக்களை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. கியூசக்ஸ் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு மூலம் சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. மேலும் தொழிற்சாலையின் உயரமான புகைபோக்கிகளில் காற்று மாசு சாதனங்கள் அமைக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வகங்கள் மூலம் கண்காணிப்பு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சேட்லைட் மூலமாகவும் சென்னை தலைமை மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வுக் கூடத்தின் மூலம் தொழிற்சாலைகளின் புகை போக்கிகள் வெளிவிடும் காற்று மாசுக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கடலூர் சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் காற்றுத்தர தொடர் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது சல்பர் டை ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட 18 வகையான ரசாயனங்கள் காற்றில் கலந்துள்ள அளவை கண்டறிகிறது. இந்த கருவி மூலம் கடலூர் சிப்காட் பகுதியில் காற்று மாசுக்களின் தரம் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு காற்று மாசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.இதுபோல் கடலூர் செம்மண்டலம் சந்திப்பில் ரூ.1.5 கோடி மதிப்பில் மற்றொரு காற்றுத்தர தொடர் கண்காணிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது உதவிப் பொறியாளர் அனந்தகிருஷ்ணன் உடன் இருந்தார்.



Tags : explosions ,
× RELATED சிவகாசியில் இருவேறு இடங்களில் நடந்த...