×

விருத்தாசலம் அருகே மழையால் 50 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம்

விருத்தாசலம், அக். 23: விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கீரனூர், மேலப்பாலையூர்,  மருங்கூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்  நிலப்பரப்பில் விவசாயிகள் கரும்பு, நெல்  விவசாயம் செய்து வருகின்றனர்.  திட்டக்குடியில் உள்ள வெலிங்டன் நீர்தேக்கத்தில் இருந்து வருகின்ற தண்ணீர் ஓடை வழியாக  வல்லியம், மேலப்பாலையூர், கீரனூர் வழியாக மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிக்கு  சென்றடைகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், வயலில் உள்ள  மழைநீர் ஓடையை நோக்கி செல்கிறது. ஆனால் ஓடையை சரிவர தூர்வாரமல்  இருப்பதினால் மழைநீர் செல்ல முடியாமல், சுமார் 50க்கும்  மேற்பட்ட ஏக்கர்  பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதிகாரிகளின்  அலட்சியபோக்கால் கீரனூர், மேலப்பாலையூர், மருங்கூர் கிராமங்களில் உள்ள பல  ஆயிரம் ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளது.

மேலும் குமாரமங்கலம் அருகே  மணிமுக்தாற்றின் குறுக்கே  கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம்  உயர்வதாகவும், தனிப்பட்ட ஒரு நபர் தடுப்பணையில் தண்ணீரை தேக்கவிடாமல்  திறந்து விடுவதினால், பாசன வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரும் நெற்பயிற்களை  மூழ்கடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால்  நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு செல்வதாக விவசாயிகள் கவலை  தெரிவிக்கின்றனர். மேலும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை காத்திட, ஓடையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Tags : Vittachalam ,
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்...