×

தீபாவளி முன்பணம் வழங்கக் கோரி நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

பண்ருட்டி, அக். 23: பண்ருட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தீபாவளி முன்பணம், சீருடை வழங்காததை கண்டித்து ஆணையரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் ஆண்கள், பெண்கள் என 116 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பண்டிகை முன்பணம் (அட்வான்ஸ்) ரூ.10 ஆயிரம் மற்றும் சீருடை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இதுவரை தீபாவளி முன்பணம் வழங்கப்படாததால் துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் துப்புரவு பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி காலை 6 மணிக்கு அலுவலகம் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த துப்புரவு பணியாளர்கள் ஆணையரை முற்றுகையிட்டு, எங்களுக்கு தீபாவளி முன்பணம் மற்றும் சீருடை கொடுத்தால்தான் நாங்கள் வேலைக்கு செல்வோம் என்று ஆவேசமாக கூறினர். அதற்கு ஆணையர், பண்ருட்டி நகராட்சியில் மட்டும் இப்பிரச்னை இல்லை. எல்லா நகராட்சியிலும் தாமதமாகத்தான் அட்வான்ஸ் தொகை கொடுத்து வருகின்றனர் என்று விளக்கம் அளித்தார். இதனால் துப்புரவு தொழிலாளர்கள் ஆவேசமடைந்து, இன்னும் எங்கள் பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்கவில்லை. எங்களுக்கு அட்வான்ஸ் வேண்டும், அதுவரை வேலைக்கு செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து மதியம் 12 மணிக்குள் முன்பணம் வழங்கப்படும், இந்தப்பணம் உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து நேற்று மதியத்துக்கு பிறகு துப்புரவு பணியாளர்களின் வங்கிக்கணக்குகளில் முன்பணம் செலுத்தப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் நேற்று அதிகாலை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Cleanup workers ,commissioner ,Diwali ,
× RELATED வெள்ளம் பாதித்த குடியிருப்புகளை...