×

வலங்கைமான் அருகே தனியார் தொண்டு நிறுவனத்தில் காணாமல் போன கார் மீட்பு வேலைபார்த்த 2வாலிபர்கள் திருடி சென்றது அம்பலம்

வலங்கைமான், அக்.23: வலங்கைமான் அடுத்த உத்தாணி கிராமத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் காணாமல் போன காரை தனிப்படை போலீசார் மீட்டனர். அங்கு வேலை செய்த வாலிபர்கள் திருடி சென்று வாகன சோதனையின் பிடிபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த உத்தானியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த டிரஸ்ட்டுக்கு சொந்தமான கார் கடந்த 19ம்தேதி இரவு காணாமல் போய்விட்டது. இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காணாமல் போன காரை கண்டுபிடிக்க சிறப்பு எஸ்ஐ தர்மராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணம் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்தகாரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

காரில் வந்த வாலிபர்கள் முன்னுக்குபின் முரனாக கூறியதை அடுத்து காருடன் காரில் வந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ரெங்கன் மகன் மணிகண்டன்(29), அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் மணிகண்டன்(27) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தாணியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒருவர் காவலராகவும், மற்றொருவர் கார் டிரைவராகவும் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள் நடத்தையில் சந்தேகமடைந்த தொண்டு நிறுவனத்தினர் இவர்களை ஒருமாத காலத்திற்குள்ளாகவே பணியிலிருந்து நீக்கி விட்டனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் அங்கு உள்ள காரை திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. இந்நிலையில் வாகன சோதனையின்போது சிக்கி கொண்டனர். வலங்கைமான் போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து காரை மீட்டனர். தொண்டு நிறுவனத்தில் வேலை செய்தவர்களே காரை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : persons ,Explosion ,Valangaiman ,charity work ,
× RELATED புதுச்சேரி அருகே வீட்டில் இருந்த...