×

உடைந்த பீங்கான், டயர்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது ஒன்றிய அலுவலக வளாகத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் அவலம்

திருவாரூர், அக்.23: திருவாரூரில் இருந்து வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகமானது டெங்கு கொசு உற்பத்தி செய்யும் அலுவலகமாக இருந்து வருவது மட்டுமின்றி மது கூடமாகவும் இருந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய, பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் இந்த டெங்கு கொசு உற்பத்தி செய்யும் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இதுபோன்று வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ளாமல் டெங்கு கொசு பரவும் வகையில் பொருட்களை வைத்திருக்கும் வீட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராத தொகையாக ரூ 3 லட்சம் வரையில் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திருவாரூர் நகராட்சி சார்பில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு ரூ. ஒரு லட்சம் அபராதமாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் அடிக்கடி குற்றம் சாட்டி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி திருவாரூர் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகமானது இதே போன்று டெங்கு கொசு உற்பத்தி செய்யும் அலுவலகமாக இயங்கி வருகிறது. இங்கு இருந்து வரும் வளாகத்தில் உடைந்த பீங்கான்கள், டயர்கள் என அனைத்திலும் மழைநீர் தேங்கி அதில் டெங்கு கொசு புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகின்றன. இதுமட்டுமன்றி இந்த அலுவலகத்தின் வளாகத்தில் மதுபாட்டில்கள் அதிகமாக சிதறி கிடப்பதன் காரணமாக இந்த அலுவலகமானது இரவு நேரங்களில் மது கூடமாகவும் இயங்கிவரும் நிலை இருந்து வருகிறது. எனவே அலுவலர்கள் பொது மக்களிடம் பல ஆயிரக்கணக்கில் அபராத தொகையை விதித்து வரும் நிலையில் தங்களது அலுவலகத்தை கூட ஏன் தூய்மையாக வைத்துக்கொள்வது இல்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office complex ,Union ,
× RELATED உலக பூமி தினம்