×

மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா? மனோதங்கராஜ் எம்எல்ஏ கண்டனம்

குலசேகரம், அக். 23: மனோதங்கராஜ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த தேர்தல் நேரத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என கூறிய அதிமுக அரசு இன்று மது விற்பனைக்காக 385 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்திருப்பது தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல். மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு இலக்கு நிர்ணயித்திருக்க வேண்டிய அரசு, மதுவை அதிகமாக விற்பனை செய்வது எப்படி என்று திட்டம் போட்டு கொண்டிருக்கிறது. பொது மக்களே அனைவரும் சென்று குடியுங்கள், குடித்து சீரழியங்கள், உங்கள் குடும்பங்களும் சீரழியட்டும் என்ற நோக்கத்திலேயே மது விற்பனைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிலவும் வேலை வாய்ப்பு பிரச்சனையை தீர்க்கவோ, தினசரி அரங்கேறும் திருட்டு, கொலை போன்ற அசம்பாவிதங்களை குறைக்கவோ, குமரி வட்டத்தில் சின்னாபின்னமாகிக்கிடக்கும் சாலைகளை சரிசெய்வது குறித்தோ, பாழடைந்த பேருந்துகளை மாற்றி நல்ல பேருந்துகளை இயக்குவது குறித்தோ எந்த இலக்கும் நிர்ணயிக்க இயலாத அரசு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்திருப்பது இந்திய அரங்கில் தமிழர்களை குடிகாரர்களாய் சித்தரிக்கும் செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கில் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 55 ரூபாய்க்கான இலக்கு அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டிற்கு குடிகார மாநிலம் என்ற பெயரை சூட்ட அதிமுக அரசு முயற்சி எடுத்து வருகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழ ஆரம்பித்துவிட்டது.எனது தொகுதியில், மக்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் குடும்ப பெண்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை, எப்படியாவது இந்த மதுக்கடைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பது தான். ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு இன்று மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் பாரை மும்முரமாக திறந்து வருகிறது. பல ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் மக்களே சேர்ந்து மதுக்கடைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால் கூட அரசு அதனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இத்தகைய அராஜகங்கள் அனைத்திற்கும் விரைவில் முடிவுகாலம் வரும். மக்கள் தக்க பாடம் புகட்டுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Manothangaraj MLA ,
× RELATED ரேசன் அரிசி குறைப்பை கண்டித்து...