×

நாங்குநேரி தொகுதியில் போலீசாரின் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி காங்கிரஸ் வெற்றிபெறும்

நாகர்கோவில், அக்.23: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போலீசாரின் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்.பி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்த தினத்தையொட்டி நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்.பி கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார். தனது பாராளுமன்ற செயல்பாடுகள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் அவர் வெளியிட்டார். பின்னர் வசந்தகுமார் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது :   நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் முடிந்தபிறகு நாகர்கோவில் வருவதற்காக பாளையங்கோட்டையில் இருந்து  சேரன்மாதேவி, பணக்குடி சாலையில் வரலாம் என்றிருந்தேன். வரும் வழியில் என்னை தடுத்து டி.எஸ்.பி. வலது பக்கமாக திரும்பி பாளையங்கோட்டைக்கு செல்லுங்கள் என்றார். அவ்வாறு சொன்னவர் திரும்பவும் வேனை எடுத்து வந்து முன்னால் வந்து என்னை போகவிடாமல் நிறுத்தினார். முன்னும் பின்னும் போகவிடாமல் போலீசார் தடுத்தனர். அதன் பிறகு யாரிடமோ தொடர்பு கொண்டு உத்தரவு பெற்றார்.  எனது வாகனத்தில் போலீசை அழைத்துச் செல்ல கூறினார். முன்னும் பின்னும் போலீஸ் வாகனத்துடன் என்னை நாங்குநேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். என் மீது வழக்குப்போட்டதாக சொன்னார்கள்.  நான் பணம் கொடுத்ததை நீங்கள் பார்த்தீர்களா? என்றேன். சாலையில் போன எம்.பி.யை அவர்கள் கைது செய்து நாங்குநேரி ஸ்டேஷனில் 4 மணிநேரம் வைத்திருந்தார்கள். ஜனநாயகத்தை மீறி தமிழக போலீசார் இப்படி நடந்து கொண்டனர். என்னிடம் இருந்தவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். அதிமுக வெற்றிபெற வாய்ப்பு இல்லாததால் வசந்தகுமாரை தடுத்து நிறுத்தி காங்கிரஸ் வெற்றியை தடுக்கலாம் என நினைத்தார்கள். எனது கைதால் கை சின்னத்திற்கு வாக்காளர்கள் வாக்களித்தனர். எப்.ஐ.ஆர். காப்பி வந்ததும் கட்சி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்.

மேல்சபை எம்.பி. விஜிலா சத்தியானந்த் அங்கு பிரசாரம் செய்தார். தேர்தல் ஆணையம் மட்டுமல்ல காவல்துறையும் அவர்களுக்கு உதவியாக இருந்தார்கள். சம்பிரதாய வழக்கு என்றால் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதா? ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதியில் அ.தி.மு.க.வினரே எங்களுக்குத்தான் வாக்களிக்கின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு இருக்கிறது. ஆனால் எங்கள் வேட்பாளர் அப்படி அல்ல. பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து காவல் நிலையத்தில்  வைத்ததற்காக சபாநாயகருக்கு தகவல் அளித்துள்ளோம். போலீசாரின் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெறும். குமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், வர்த்தக பிரிவு முருகேசன், மாவட்ட துணை தலைவர் மகேஷ் லாசர், மகளிர் பிரிவு தலைவர் சபிதா, தங்கம் நடேசன், வட்டார, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

‘பா.ஜ.வுக்கு ரவுடிகள் மீதுதான் நம்பிக்கை’
வசந்தகுமார் எம்.பி மேலும் கூறுகையில், ‘நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட வலியுறுத்தி அந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். அதிமுகதான் இது தொடர்பாக வாக்குறுதி அளித்து 3 முறை ஏமாற்றியது. பிரதமர் மோடியும் அவர்களை ஏமாற்றினார். அதனால்தான் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் முன்னிலையில் ரவுடி ஒருவர் நாகர்கோவிலில் பா.ஜ.வில் இணைந்துள்ளது என்பது தற்போது உள்ள அவர்களின் ஆட்சி மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, ரவுடிகள் மீதுதான் நம்பிக்கை உள்ளது என்பதை காட்டுகிறது’ என்றார்.


Tags : Congress ,constituency ,Nankuneri ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்