×

புதூர் அருகே 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட மாதலாபுரம் - கந்தசாமிபுரம் சாலைப்பணி 6 கிராம மக்கள் 5 கிமீ நடந்து செல்லும் அவலம்

விளாத்திகுளம்,  அக். 23: விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட  மாதலாபுரம்-கந்தசாமிபுரம் வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே  கிடப்பில் போடப்பட்டதால் 6 கிராம மக்கள் 5 கி.மீ. நடந்துசெல்லும் அவலம் தொடர்கிறது. ஊராக  வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2018-2019 சாலை மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் புதூர் ஒன்றியத்தில் மாதலாபுரம்-கந்தசாமிபுரம் வரை 5 கிமீ  தொலைவுக்கு சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிதாக தார்ச்சாலை அமைத்திட ரூ. 1.30  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இதற்கான பணிகள்  துவங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே இருந்த பழைய சாலையை தோண்டி எடுத்து அதன்  மீது சரள்மண் விரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சாலை அமைக்க  ஜல்லி கற்களும்  சாலையின் மத்தியில் குவிக்கப்பட்டநிலையில் கிடப்பில் போடப்பட்டது. இவ்வாறு கடந்த 6  மாதங்களாக சாலை அமைக்கு பணி கிடப்பில்  போடப்பட்டுள்ளதால் மாதலாபுரம், புதுசின்னையாபுரம், பி. ஜெகவீரபுரம்,  சேர்வைக்காரன்பட்டி, சங்கரன்பட்டி, கந்தசாமிபுரம் உள்ளிட்ட 6 கிராம மக்கள்  கடுமையாக அவதிப்படுகின்றனர்.

மேலும் சாலை பணிகள் தொடங்கிய நாள் முதல்  விளாத்திகுளம்- கந்தசாமிபுரம் அரசு பஸ் போக்குவரத்து சேவை  மாதலாபுரத்துடன் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி மாணவ,  மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் 5 கிமீ  தொலைவுக்கு நடந்தே செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. ஜல்லி கற்கள்  வழிநெடுகிலும் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் இருசக்கர வாகனங்கள்,ஆட்டோ  உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மேலும் இரவு  நேரங்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் திடீர் மருத்துவ  சிகிச்சைக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

முற்றுகை போராட்டம்: இதுகுறித்து  மார்க்சிஸ்ட் கட்சியின் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் புவிராஜ்  கூறுகையில், ‘‘மாதலாபுரம்-கந்தசாமிபுரம் தார்ச்சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் தினமும் 5  கிமீ தொலைவுக்கு தினமும் நடந்து செல்லும் அவலம் தொடர்கிறது. மேலும்  தற்போது அமைக்கப்பட்டு வரும் தார்சாலையின் அகலத்தை குறைத்து பணிகள்  நடந்துள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி  சாலையின் அகலத்தை குறைக்காமல் மேம்படுத்தவும், கிடப்பில்போட்ட சாலைப்பணிகளை உடனடியாகத் துவங்கி விரைந்து முடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகத்தை மக்களைத் திரட்டி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

Tags : village ,Budur ,
× RELATED பாணாவரம் அருகே விழிப்புணர்வு உடல்,...