×

செண்பகவல்லியம்மன் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கோலாகலம் கோவில்பட்டியில் ஐப்பசி தேரோட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

கோவில்பட்டி, அக். 23: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் தேரோட்ட வைபவத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ வடம்பிடித்து துவக்கிவைத்தார். இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற செண்பகவல்லி அம்பாள் சமேத பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு சமுதாய மண்டகபடிதாரர்கள் சார்பில் காலை, இரவு காமதேனு, ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடந்தது. 9ம் நாளையொட்டி நேற்று (22ம் தேதி) வணிக வைசிய சங்க மண்டகப்படிதாரர்கள் சார்பில் தேரோட்ட வைபவம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளும், காலை 7மணிக்கு ரதாரோகணமும் நடந்தது.

காலை 8.30 மணிக்கு தேரோட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ வடம் பிடித்து இழுத்து துவக்கிவைத்தார் தொடர்ந்து மேளத்தாளம், செண்டா மேளம் முழங்க புறப்பட்ட தேரை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் வடம்பிடித்து இழுத்து ரதவீதிகள் வழியாக நிலையம் சேர்த்தனர். இதில் வணிக வைசிய சங்கத் தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிகுமார், வணிக வைசிய பள்ளிக்குழு தலைவர் வெங்கடேஷ், பள்ளிக்குழு தலைவர் நடராஜன், சங்க பொருளாளர் கருப்பசாமி, துணைத்தலைவர் காளியப்பன், துணைச் செயலாளர் வேல்முருகன், மணிமாறன், சுப்பிரமணியன் ஆசிரியர் நினைவு பள்ளி செயலாளர் மகாலிங்கம், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சின்னப்பன், இணை ஆணையாளர் பரஞ்சோதி, அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஆபிரகாம் அய்யாத்துரை, ரத்தினவேல், வேலுமணி, ரமேஷ், மகேஷ்குமார், ஜனக்கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, கோவில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு 7.30 மணிக்கு அன்னவாகனத்தில் அம்பாள் வீதியுலா நடந்தது.  

விழாவின் நிறைவு நாளான நாளை மறுதினம் (25ம் தேதி) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் முடுக்குமீண்டான்பட்டி ஆவுடையப்பன் செட்டியார் குடும்பத்தினர் மண்டகபடிதாரர் சார்பில் திருக்கல்யாணமும், தொடர்ந்து யானை வாகனத்தில் சுவாமியும், பல்லக்கில் அம்பாளும் எழுந்தருளியதும் பட்டணப்பிரவேசம் நடக்கிறது. இதையொட்டி திருக்கல்யாணம் முடிந்ததும் கோயில் முன்புறம் உள்ள பிராமண மகாசபை காயத்ரி மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையாளர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ரோஷினி  செய்திருந்தனர்.

Tags : Kadambur Raju ,Ipazi Therottam ,Temple Festival ,
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து