×

சாத்தான்குளத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் நவம்பரில் திறப்பு

சாத்தான்குளம், அக். 23: சாத்தான்குளத்தில் கட்டிமுடித்து ஓராண்டாகியும் காட்சிப் பொருளாக இருந்துவரும்  புதிய நீதிமன்ற கட்டிடம், தினகரன் செய்தி எதிரொலியாக நவம்பரில் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நீதிபதி சுரேஷ் விஸ்வநாதன் தெரிவித்தார். சாத்தான்குளத்தில் கடந்த 2000 ஆண்டு முதல் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் போதிய வசதி இல்லை. இதுகுறித்து பல முறை விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகம் அருகே ரூ5.50 கோடியில்  ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும்  நீதிபதி குடியிருப்புகள் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக இருந்துவந்தன.

இதுகுறித்து தினகரனில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நீதிபதி சுரேஷ்விஸ்வநாதன் கூறுகையில், ‘‘சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற  கட்டிடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 நாளில் அதற்கான ஏற்பாடு  செய்யப்பட்டு நவம்பரில் நீதிமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதுசம்பந்தமாக போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

Tags : court building ,
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...