×

வில்லிவாக்கம் மார்க்கெட்டில் 2 ஆயிரம் கள்ளநோட்டுகளை மாற்றிய முதியவருக்கு வலை

அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள மார்க்கெட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் நடைபாதை காய்கறி கடை, தேங்காய் மண்டி, எண்ணெய் கடை உள்ளிட்டவை அமைந்துள்ளன. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள மார்க்கெட் என்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் வயதான முதியவர் ஒருவர், அங்குள்ள எண்ணெய் கடையில் 2 ஆயிரம் நோட்டை கொடுத்து 1 கிலோ எண்ணெய் கேட்டுள்ளார். அந்த நோட்டை வாங்கி பார்த்த வியாபாரி, ‘‘வேறு நோட்டு இருந்தால் கொடுங்கள்’’ என்று கூறியுள்ளார். ஆனால், வேறு நோட்டு இல்லை என்று கூறி, அதை திரும்ப பெற்ற முதியவர், அருகில் இருந்த தேங்காய் கடையில் 2 ஆயிரம் கொடுத்து 10 தேங்காய் வாங்கிவிட்டு மீதி பணத்தை பெற்று சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் மார்க்கெட் வந்த முதியவர், 2 ஆயிரம் நோட்டை கொடுத்து மளிகை கடை, காய்கறி கடை என பல்வேறு கடைகளில் மாற்ற முயன்றார். ஆனால், முடியவில்லை.

இறுதியாக குமார் என்பவரின் கடையில் அந்த ரூபாய் நோட்டை கொடுத்து, 50 முட்டைகள் மற்றும் மீதி பணத்தை பெற்று சென்றார். சிறிது நேரத்தில், அதே முதியவர் இளம்பெண் ஒருவருடன் வந்து, அங்குள்ள தேங்காய் கடையில் மீண்டும் 2 ஆயிரம் நோட்டை கொடுத்து 10 தேங்காய் வாங்கி சென்றுள்ளார். அவர் சென்ற பின்னர்தான் இது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் தேங்காய்கடை உரிமையாளர் கிட்டு என்பவர் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், அந்த முதியவர் அப்பகுதியில் பல்வேறு கடைகளில் 2 ஆயிரம் நோட்டை  மாற்றியதும், மாற்ற முயற்சித்ததும் தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து முதியவர் கள்ளநோட்டை மாற்றும் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : elderly ,
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு