×

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் கைவரிசை 8 ரவுடிகள் சிறையிலடைப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ.சாலையில் 100க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. இதேபோல் வண்ணாரப்பேட்ைட, திருவொற்றியூர் சாலையில் 500க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இந்நிலையில், வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள் புத்தாடை மற்றும் நகை வாங்குவதற்கு மேற்கண்ட கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின், செல்போன் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.  

அதில், கொடுங்கையூர், வியாசர்பாடி,  திருவொற்றியூர், மெரினா, பாரிமுனை, பூக்கடை ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசலை  பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் ஆனந்த் (26), துரைபாபு (25), சூர்யா (24), விஜி (23), அந்தோணி (26), ரவி (25), வெங்கடேசன் (27), அருள் (26) ஆகியோர் என தெரிந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. சாலையில் உயர் கோபுரங்களை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்போன் பறித்த 3 ரவுடிகள் கைது

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திக் (29), கடந்த 21ம் தேதி வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், அவரை வழிமறித்து, கத்தி முனையில் மிரட்டி, அவரது சட்டை பையில் வைத்திருந்த ₹1000, செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். போலீசார் விசாரணையில், கொருக்குப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்த வெங்கடேசன் (43), பாரதி நகரை சேர்ந்த சுரேஷ் (எ) அரிகிருஷ்ணன் (28), ஜெ.ஜெ. நகரை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags : jails ,public ,
× RELATED பொதுப்பிரிவினருக்கு 4ம் நாள் மருத்துவ கலந்தாய்வு