×

சுகாதாரமான முறையில் இருப்பது மட்டுமே தீர்வு கம்பூசியா மீன்களால் டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க முடியாது

வேலூர், அக்.23: கம்பூசியா மீன்களால் டெங்கு பரப்பும் கொசுப்புழுக்களை அழிக்க முடியாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு 11 பேரும் பலியாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதவிர மர்மகாய்ச்சலுக்கு பலர் பலியாகி இருக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு, மர்மகாய்ச்சலால் 5 பேர் பலியாகி உள்ளனர். எனவே, டெங்கு கொசுப்புழு உற்பத்தி குறித்து வீடு வீடாக அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும், வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், கொசுப்புழுவை அழிக்கும் கம்பூசியா மீன்களால் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுப்புழுவை அழிக்க முடியாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதார முறையில் இருப்பது மட்டுமே தீர்வு என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நீர்நிலைகளில் உள்ள கொசுப்புழுவை உற்பத்தியாகாமல் அழிக்க கம்பூசியா வகை மீன்கள் விடப்படுகிறது. இந்த மீன்கள் கொசுவின் முட்டைகளை சாப்பிட்டு ஆரம்ப நிலையிலேயே கொசுக்களின் உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அதன்படி, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகள் தீவிரமடையும்போது குறிப்பிட்ட இடங்களை பட்டியலிட்டு பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்வார்கள். அந்த இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருந்தால், மீன்வளத்துறையில் இருந்து கம்பூசியா மீன்களை வாங்கி நீர்நிலைகளில் விடுவார்கள்.

இந்நிலையில், கம்பூசியா வகை மீன்களை நீர்நிலைகளில் விடுவதால் டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுப்புழுக்களை அழிக்க முடியாது. காரணம் பெரிய நீர்நிலைகளில் ஏடிஎஸ் கொசுப்புழு உற்பத்தியாவதில்லை. வீடுகளுக்கு அருகில் உள்ள டயர்கள், தூக்கி வீசப்படும் பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில்தான் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுப்புழு உற்பத்தியாகிறது. எனவே, சுகாதாரமான முறையில் வீடுகளை பராமரிப்பதால் மட்டுமே டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும்’ என்றனர். இதுதொடர்பாக பூச்சியில் வல்லுனர்கள் கூறுகையில், ‘டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடங்களில் ஏடிஎஸ் கொசுக்கள் இல்லாவிட்டால், அவர்கள் எந்த இடத்தில் அதிகமாக இருந்தார்களோ அந்த இடத்தில் ஆய்வு செய்யப்படும். இதையடுத்து சுகாதார துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

மேலும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர் முகவரி 24 மணிநேரத்துக்கு ஒருமுறை சுகாதாரத்துறையில் இருந்து பெறப்படுகிறது. வீட்டில் அதிகபட்சமாக 2 நாட்களுக்கு மேல் பாத்திரங்களில் தண்ணீர் வைக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் பாத்திரங்களை தூய்மைப்படுத்தி தண்ணீரை நிரப்ப வேண்டும். அதேபோல், பிளீச்சிங் பவுடரை போட்டு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி கொள்ளலாம். தண்ணீர் பாத்திரங்களை திறந்து வைக்க வேண்டாம். மேலும் வீடுகளுக்கு அருகிலும் மழைநீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே டெங்கு கொசுப்புழுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’ என்றனர்.

Tags : Cambusia ,dengue mosquitoes ,
× RELATED சென்னையில் டெங்கு கொசுக்களை அழிக்க...