×

வேலூர் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 5 ஆனது டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு சிறுவன், மாணவி பலி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

நாட்றம்பள்ளி, அக்.23: நாட்றம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவனும், குடியாத்தம் அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவியும் பரிதாபமாக பலியாகினர். இதனால் மாவட்டத்தில் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 15ம் தேதி பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த எல்கேஜி மாணவி நட்சத்திரா(4) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த ராம்குமார் என்பவர் மர்ம காய்ச்சலால் இறந்தார். மேலும், 20ம் தேதி காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த விஜய் என்பவரது 13 மாத குழந்தை மர்ம காய்ச்சல் காரணமாக இறந்தது. இந்நிலையில், நாட்றம்பள்ளி தாலுகா வெள்ளநாயக்கனேரியை சேர்ந்த கூலித்தொழிலாளி அகிலன் மகன் கிரண்குமாருக்கு(5) கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை ெசய்ததில், சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து மருத்துவர்கள், சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை கிரண்குமார் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த பச்சூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்லமுத்து தலைமையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் வெள்ளநாயக்கனேரி கிராமத்திற்கு சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதேபோல், குடியாத்தம் அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவரசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள்கள் புவியரசி(14), திவ்யா(13). குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் புவியரசி 8ம் வகுப்பும், திவ்யா 7ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த 18ம் தேதி திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர்களை கடந்த 19ம் தேதி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று முன்தினம் இரவு இறந்தார். புவியரசி சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இறந்த மாணவி திவ்யாவின் ரங்கசமுத்திரம் கிராமத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் முகாமிட்டு பிளீச்சிங் பவுடர் தூவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திவ்யா பயின்ற ஜோதி உயர்நிலைப்பள்ளியில் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் தலைமையில் தூய்மை பணிகள் நடந்தன. வேலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் டெங்கு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : deaths ,Vellore district ,
× RELATED திருப்பத்தூரில் விபரீதம் ஓடும்...