×

முத்தியால்பேட்டை ராஜகுளம் - காஞ்சிபுரம் சாலையில் முட்புதர்கள் மண்டிய வளைவுகளில் விபத்து அபாயம்

வாலாஜாபாத், அக். 23: முத்தியால்பேட்டை ராஜகுளம் - காஞ்சிபுரம் சாலை வளைவுகளில், முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. இந்த விளைவுகளில் விபத்துக்கள், தொடர்கதையாக நடக்கிறது. முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனமாக உள்ளனர் என வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். முத்தியால்பேட்டை ராஜகுளத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்லும் புறவழிச்சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இச்சாலையை ஒட்டி நத்தப்பேட்டை, களியனூர், வையாவூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக ஐயம்பேட்டை, வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பைக், கார், வேன் உள்பட பல்வேறு வாகனங்களில் தினமும் நூற்றுக்கணக்கானோர், இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

அதேபோல் செங்கல்பட்டு, மறைமலைநகர், ஒரகடம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் இச்சாலை வழியாக தினமும் சென்று வருகின்றன. குறிப்பாக, இந்த சாலையை ஒட்டி 10க்கும் மேற்பட்ட இடங்களில் குறுகிய வளைவுகள் உள்ளன. இந்த குறுகிய வளைவுகளில் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து சாலை வளைவுகளே தெரியாத வண்ணம் மூடி கிடக்கின்றன. இதனால், பைக்கில் செல்பவர்களும், கனரக வாகனங்களும் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றன.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், முத்தியால்பேட்டையில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் ராஜகுளம் வரை செல்லும் சாலையை ஒட்டி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. காஞ்சிபுரம் செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் இந்த புறவழிச்சாலையில் சென்று வருகின்றன.

இங்கு 10க்கும் மேற்பட்ட இடங்களில் குறுகிய வளைவுகள் உள்ளன. இங்கு குறுகிய வளைவுகள் இருப்பதை அடையாளம் காண நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த குறுகிய வளைவுகளில் வரும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புதர்கள் மண்டி காணப்படுகின்றன. இதனால், இந்த சாலையில் தினமும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம், வளைவுகளில் ஒரு சில டிரைவர்கள் ஹாரன்களை பயன்படுத்துவது இல்லை. மேலும், இந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் பைக்கில் அதிவேகமாக வருவதாலும் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. குறுகிய வளைவு என நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளால், எந்தவித பயனும் இல்லை.நெடுஞ்சாலை துறையினர் மெத்தனத்தை கைவிட்டு வளைவு பகுதிகளில் உள்ள முட்புதர்களை அகற்றி நடவடிக்கை எடுத்தால் விபத்துகள் குறையும் என்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...