×

மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் கிராமத்தில் 40 ஆண்டுகளாக பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்

செய்யூர், அக்.23: மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகளின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம் தேவாத்தூர் ஊராட்சி, பழைய காலனியில் அங்கன்வாடி மையம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், தற்போது பழுதடைந்து, ஆங்காங்கே சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால், விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் கசிந்து வருகிறது. இதனால், குழந்தைகள் உட்கார இடமில்லாமல் கடும் அவதியடைகின்றனர். மேலும், மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாமல், வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் அங்கன்வாடி மையம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.

இதனால், அங்கன்வாடி மைய வளாகத்தினுள் அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் உலா வருவதாக புகார் கூறுகின்றனர். மேலும், இங்கு கழிப்பறை வசதிகள் இல்லாததால் குழந்தைகள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி, பழுதான இந்த கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதே பகுதியில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை உள்பட அனைத்து வசதியுடன் கூடிய புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டித்தர மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Anganwadi Center ,village ,Devathoor ,building ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை