×

கழிவுநீருடன் மழைநீர் கலந்து தண்ணீரில் மூழ்கிய வீடுகள்

திருப்போரூர், அக்.23: திருப்போரூர் ஒன்றியத்தில் தாழம்பூர் ஊராட்சி உள்ளது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், நாவலூர், செம்மஞ்சேரி ஆகியவற்றை ஒட்டி தாழம்பூர் ஊராட்சி அமைந்துள்ளதால், ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த ஊராட்சியில் உருவாகி உள்ளன. இதனால் ஊராட்சியில் மக்கள் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தாழம்பூர் ஊராட்சியில் பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி போன்றவையும் உள்ளன. கணிசமான நிதி ஆதாரம் கொண்ட இந்த ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தாழம்பூர் ஊராட்சியில் அடங்கிய அனுமன் நகரில் ஏராளமானோர் வீடு கட்டி வசிக்கின்றனர். தாழ்வான பகுதியாக இருப்பதாலும், இதையொட்டி உள்ள சிறுசேரி - சித்தாலப்பாக்கம் சாலை உயரமாக போடப்பட்டதாலும் சிறிதளவு பெய்த மழைக்கே அனுமன் நகர் குடியிருப்பு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் லேசான மழைக்கே, இந்த குடியிருப்பு சாலைகளில் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. சாலையில் இடுப்பளவுக்கு மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சில வீடுகளில், தண்ணீர் புகுந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் மழை நீரை சிறிது சிறிதாக வெளியேற்றி வருகின்றனர். பல இடங்களில் தேங்கி உள்ள மழை நீரால் கொசு உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை பரப்பும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீரை வெளியேற்றுவதற்கான வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என, கொசு மருந்து அடித்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஊராட்சி கிளாம்பாக்கம் 3வது வார்டில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வானொலி மன்றம் தெருவின் கால்வாயில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கடந்த 3 மாதங்களாக தேங்கி குளம்போல் நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்கள் பல்வேறு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, மேற்கண்ட பகுதி முழுவதும் மழைநீருடன், கால்வாயில் உள்ள கழிவுநீர் கலந்து சாலையில் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். கிளாம்பாக்கம் மேம்பாலம் அருகில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இரவு நேரங்களில் இந்த குடியிருப்புகளில் இருந்து, பம்பிங் செய்யப்பட்டு கழிவுநீர் திறந்துவிடுகின்றனர். அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வானொலி மன்றம் தெருவில் உள்ள கால்வாயில் வந்து நிற்கிறது. அருகில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியபடி 18அடி நீர்வரத்து கால்வாய் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக தூர் வாராததால் முட்புதர்கள் அடர்ந்து கிடக்கிறது. இதனால், தற்போது பெய்து வந்த மழையின்போது அப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வானொலி மன்றம் தெருவை சூழ்ந்துள்ளது.

இதில் தெருவில் உள்ள சிமென்ட் சாலையில் பாசிகள் படர்ந்துள்ளதால், கழிவுநீருடன் கலந்த மழைநீரில் பள்ளி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் நடந்து செல்லும்போது வழுக்கி விழுந்து எழுந்து படுகாயம் அடைகின்றனர். தெருவில் உள்ள குடிநீர் குழாய்களை சுற்றி கழிவுநீரும், மழைநீரும் சூழ்ந்துள்ளதால், பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, அதில் கழிவுநீரும், மழைநீரும் கலக்கும் அபாயமும் உள்ளது. இதன்மூலம், தொற்றுநோய் பரவும் பேராபத்து உள்ளது. மேலும் கால்வாயில் டெங்கு புழுக்கள் மற்றும் கொசுக்கள் ஆங்காங்கே அடர்த்தியாக காணப்படுகின்றன. இதனால் குழந்தைகள், கர்ப்பிணி, முதியோர் என அனைத்து தரப்பினருக்கும் மர்ம காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, வாந்தி, பேதி, மயக்கம் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

Tags : Houses ,
× RELATED மழைநீர் நடுவே வீடுகள்: தவிக்கும் பட்டாபிராம் மக்கள்