×

மறைமலைநகர் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் பார் வசதியுடன் மதுவிற்பனை

செங்கல்பட்டு, அக். 23: மறைமலைநகர் டாஸ்மாக் கடையில், 24 மணிநேரமும் பார் வசதியுடன் மதுவிற்பனை கன ஜோராக நடக்கிறது. இதன்மூலம் மாவட்ட அதிகாரிகள் கல்லாக் கட்டுகிறார்கள் என ஊழியர்களே கூறுகின்றனர். மறைமலை நகர், தொழிற்பேட்டை சாலையில் அடுத்தடுத்து 3 அரசு டாஸ்மாக் கடைகள் பார் வசதியுடன் அமைந்துள்ளன. அரசு விதிப்படி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகள் இயங்க வேண்டும். ஆனால், மேற்கண்ட பகுதியில் உள்ள 3 கடைகளும், விடிய விடிய பார் வசதியோடு மது விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரின் காவல்துறையினரும் உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளில், வெளிப்படையாகவே கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதையொட்டி, இரவு நேரங்களிலும், சாலை மற்றும் தெருக்களில்  குடிமகன்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

டாஸ்மாக் கடையின் அருகே குடியிருப்புகள், மகளிர் தங்கும்  விடுதி, ஏடிஎம் மையம், மறைமலைநகர்  காவல்நிலையம், தீயணைப்பு நிலையம்,  கோயில், பஸ் நிறுத்தம், பன்னாட்டு தொழிற்சாலைகள்,  அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. இங்கு வேலைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள், குடிமகன்களின் அட்டகாசத்தால்,   மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் சாலை விபத்துகளும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. எனவே  பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள மேற்கண்ட 3 டாஸ்மாக் கடைகளை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். அனுமதியின்றி 24 மணிநேரமும் நடக்கும் மது விற்பனையை தடுத்து,  டாஸ்மாக் பாருக்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில், டாஸ்மாக் அதிகாரிகள், போலீசாரை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சரி கட்டிவிடுகிறார்கள். இதனால், அதிகாரிகளும் கல்லாக் கட்டுகின்றனர். இதனை பயன்படுத்தி சரக்குகள் இரு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. அதிகாரிகளே ஆதரவு தரும்போது, யார் எங்களை தட்டிக் கேட்க முடியும் என்றார்.

Tags : bar ,Maramalai Nagar Task Shop ,
× RELATED கரூரில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்