×

வெளுத்து கட்டும் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரம், அக்.23: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் ஓரளவு  நிரம்பி வருகின்றன. இதனால்  விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் மாவட்டம் முழுவதும் ஏரிகள் அதிகளவில் உள்ளன. இங்கு பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால், அனைத்து ஏரிகளிலும், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வட மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில், தென் மேற்கு பருவமழையின் போது, குறைந்த அளவே மழை கிடைக்கும். வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயிகள் காத்திருப்பார்கள். அதனடிப்படையில் கடந்த  சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்கிறது. மாவட்டத்தின் சிறிய கிராமத்திலும் சிறு மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதையொட்டி, ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், பல ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து கிடப்பதால், ஏரிகளுக்கு தண்ணீர் வராமல் தடைபடுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். சில ஏரிகளின் பிரச்னைகள் குறித்து, பொதுப்பணித் துறையிடம் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் பலர் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பண்ருட்டி புது ஏரி, எறையூர் தேவநேரி ஏரி, குண்டுபெரும்பேடு ஏரி, மாத்தூர் ஏரி,  தத்தனூர் ஏரி ஆகிய ஏரிகளும், காஞ்சிபுரம் தாலுகாவில் கரூர் தண்டலத்தேரி என 6 ஏரிகளில் 100 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளன. மேலும் 13 ஏரிகள் 70  சதவீதத்திற்கும் அதிகமாகவும், 50 சதவீதத்துக்கு அதிகமாக 60 ஏரிகளும் நிரம்பி உள்ளன. பெரும்பாலான ஏரிகள், கோடை காலம் முதல் வறண்டு கிடந்த நிலையில், மழை காரணமாக, கடந்த சில நாட்களில் மட்டும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : lakes ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...