×

மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ் திடீர் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி


சென்னை: சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் செயல்பட்டு வந்த மெட்ரோ ரயில் நேரத்தை அதிகாலை 4.30 முதல் இரவு 11 மணி என நிர்வாகம் நீட்டித்தது. இந்த நேர நீட்டிப்பை தொடர்ந்து குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் திருமங்கலம், கிண்டி, மீனம்பாக்கம், அசோக் நகர், மண்ணடி, அண்ணாநகர் கிழக்கு மற்றும் நங்கநல்லூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டது. 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் 12 மணி நேரத்திற்கு இருசக்கர வாகனம் நிறுத்த மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 250ல் இருந்து 500 ஆகவும், நான்கு சக்கர வாகன கட்டணம் 500ல் இருந்து 1,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.

24 மணி நேரத்திற்கு இருசக்கர வாகனத்திற்கு 1,000ல் இருந்து 1,500 ஆகவும், கார் பார்க்கிங் கட்டணம் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. மாதாந்திர பார்க்கிங் கட்டணம் திடீரென இருமடங்கு உயர்த்தப்பட்டது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 60 சதவீதம் பேர் இந்த மாதாந்திர பார்க்கிங் சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று திடீரென திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், எழும்பூர், மண்ணடி, உயர்நீதிமன்றம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் கட்டண சேவையை நிறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுவரையில் மாதாந்திர பார்க்கிங் கட்டண சேவையை பயன்படுத்தியவர்களுக்கு பாஸ் புதுப்பிக்க வேண்டாம் எனவும், அவர்களை தினம் தோறும் வாகன நிறுத்த பயன்படுத்தும் பாஸ்களை பயன்படுத்துமாறும் மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாதாந்திர பாஸ் பயன்படுத்தும் பயணிகளுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாதாந்திர பார்க்கிங் பாஸ் நடைமுறையை மீதம் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நிறுத்திவிட்டு ‘டெய்லி பாஸ்’ திட்டத்தை மேம்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 60 சதவீதம் பேர் பயன்படுத்தும் மாதாந்திர பாஸ் நடைமுறையை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : stop ,stations ,Travelers ,
× RELATED அறந்தாங்கியில் இருந்து திருப்பதி,...