×

சிறைவாசிகள் தயாரித்த காற்றை தூய்மையாக்கும் ‘பேக்’ விற்பனைக்கு வந்தது

திருச்சி, அக்.18: திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலம் காற்றை தூய்மைப்படுத்தும் பொருள் தயாரிக்கப்பட்டு, நேற்று முதல் அது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.திருச்சி மத்திய சிறையில் 700 தண்டனை கைதிகள், 600 விசாரணை கைதிகள் உள்ளனர். இங்கு விவசாய பணிகள், இனிப்பு, காரம் தயாரித்தல், பேக்கரி, உணவகம், தையலகம் நடத்துதல் உள்ளிட்ட பணிகளில் கைதிகள் டுபடுத்தப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆயுள் தண்டனை பெற்ற 6 கைதிகள் மூலம் காற்றை தூய்மைப்படுத்தும் பொருள் தயாரிக்கப்பட்டு, அது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.தேங்காய் மட்டைகளை கரியாக்கி அவற்றுடன் கார்பன் பஞ்சு, லெனன் ஆகியவற்றை பயன்படுத்தி காற்று பரிவர்த்தனை செய்யும்படி காட்டன் துணியால் பேக் உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இதனை அலமாரி, படுக்கை அறை, சமையலறை, வரவேற்பறை, கழிவறை, குளிர்சாதன பெட்டி, காலணிகள், 4 சக்கர வாகனங்களில் வைத்து காற்றை தூய்மைப்படுத்தலாம். இவ்வாறு செய்தால் அலமாரி, பீரோக்களை திறக்கும்போது வாடை வராது. நீண்டதூர பயணத்தின்போது காருக்குள் காற்று மாசுபடுவதை தடுக்கலாம். இந்த பேக் காற்றில் உள்ள மாசுக்களை நீக்கி காற்றை தூய்மையாக்கி ஆரோக்கியமாக வாழ உதவியாக இருக்கும்.

இந்த பொருளை 2 வருடத்துக்கு பயன்படுத்தலாம். மாதந்தோறும் 2 மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் வைத்து அதன் செயல்பாட்டை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதன் விற்பனையை சிறை அங்காடியில் நேற்று சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் சங்கர், அங்காடி கண்காணிப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெளிச்சந்தையில் 100 கிராம் எடை கொண்ட இந்த பேக்கின் விலை ரூ.400. சிறை அங்காடியில் ரூ.250க்கு விற்கப்படுகிறது.

Tags : inmates ,
× RELATED புழல் சிறை தோட்டத்தில் கைதிகள்...