×

மேச்சேரி அருகே ஓட்டு வீடு மீது இடி தாக்கியது

மேச்சேரி, அக்.18: மேச்சேரி அருகே ஓட்டு வீட்டின் மீது இடி தாக்கியதில் கணவன் -மனைவி படுகாயமடைந்த நிலையில், வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூர் தெற்கு காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். கூலி தொழிலாளியான இவரது மனைவி நல்லம்மாள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை குழந்தைகள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்தனர். இதையடுத்து, சுந்தரம், நல்லம்மாள் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். மதியம் அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. அப்போது, சுந்தரம் வீட்டிற்கு அருகே உள்ள வேப்பமரத்தின் மீது பயங்கரமாக இடி தாக்கியது. பின்னர், ஓட்டு வீட்டின் மீதும் தாக்குதல் ஏற்பட்டது. இதனால், வீட்டின் மேற்கூரை ஓடுகள் வெடித்து சிதறியது. மேலும், வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதால் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. மேலும், நல்லம்மாள் உடலில் தீப்பற்றி படுகாயமடைந்தார். பயங்கர இடி சத்தத்தால் சுந்தரத்திற்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.இதனால், அவர்கள் வலியால் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து கணவன்- மனைவி இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், பள்ளிப்பட்டி விஏஓ ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று விசாரித்தார்.  மேலும், இடி தாக்கியதில் சேதமடைந்த பொருட்களை பார்வையிட்டார்.  இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இடி தாக்கி கணவன்- மனைவி படுகாயமடைந்த நிலையில் பொருட்கள் சேதமடைந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : driveway ,Mecheri ,
× RELATED கொரோனா வார்டில் இருந்து மேலும் 2...