×

மல்லசமுத்திரம் அருகே சாலையில் குவிந்து கிடக்கும் கழிவுகள்

திருச்செங்கோடு, அக். 18: மல்லசமுத்திரம் அருகே, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றாவிடில், போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட, மோரிமேடு பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சின்ன ஏரியில் இருந்து பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில், குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை கொட்டி வந்தனர். இதனால் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து தடைப்பட்டது. வாய்க்காலில் கிடக்கும் குப்பை கழிவுகுளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடவடிக்கை  எடுத்த அதிகாரிகள், வாய்க்காலில் இருந்த குப்பை கழிவுகளை தூர்வாரி, ஓரத்தில் இருந்த சாலையில் கொட்டினர். ஆனால் இதுவரை குப்பை கழிவுகளை  அகற்றவில்லை. இப்பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், குப்பையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். பலர் சுற்றிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்  கொசுக்கள் உற்பத்தியாவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பொதுமக்கள் நலன் கருதி, சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றாவிடில், விரைவில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : road ,Mallasamudram ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...