×

கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தார்சாலை அமைப்பதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

தேன்கனிக்கோட்டை, அக்.18: தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையில், கழிவு நீர் கால்வாய் அமைக்காமல் தார்சாலை அமைக்க குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தேன்கனிக்கோட்டையில் பைபாஸ் சாலை குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. மேலும், கழிவு நீர் கால்வாய் சேதமடைந்து, வீடுகள் முன்பு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை  மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பைபாஸ் சாலையை புதுப்பிக்க, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே டெண்டர் விடப்பட்டது. இதையறிந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், கழிவு நீர் கால்வாய் அமைத்த பின்னரே, சாலை பணியை துவக்க வேண்டும் என கடந்த 2 நாட்களுக்கு முன், பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று, சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. பொக்லைன் மூலம் சாலை தோண்டும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், திரண்டு வந்து சாலை பணியை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கழிவு நீர் கால்வாய் அமைத்த பின்பே, தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே சாலையிலிருந்து 2 அடி பள்ளத்தில் வீடுகள் உள்ளதால், மண்ணை தோண்டி எடுத்து சாலை அமைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி, கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பேரூராட்சி தலைவர், அதுவரை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.


Tags : Residents ,
× RELATED ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70...