×

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ரயில்வே பொதுமேலாளரிடம் தர்மபுரி திமுக எம்பி மனு

தர்மபுரி, அக்.18: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தென்மேற்கு ரயில்வே பொது மேலாளரை ேநரில் சந்தித்து, தர்மபுரி திமுக எம்பி மனு கொடுத்தார்.  தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் அஜய்குமார் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி ரயில் நிலையத்தில் சேலம்-பெங்களூரு வழியாக செல்லும் ரயில்களுக்கு, 2 பிளாட்பார்ம்கள் உள்ளன. ஆனால், ரயில்வே நிர்வாகத்தினர் 2வது பிளாட்பார்மையே பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், 1வது பிளாட்பார்மை கடந்து சென்று ரயிலில் ஏற சிரமப்படுகிறார்கள். நடைபாலம் அதிக உயரமாக இருப்பதால், ஏறி இறங்கவும் சிரமப்படுகின்றனர். எனவே, 1வது பிளாட்பார்மில் நிரந்தரமாக பயணிகள் ஏறவும், இறங்கவும் ரயிலை நிறுத்த வேண்டும். அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. ஆனால், ரயில்வே நிர்வாகம் இதுவரை அவர்களது பணியினை தொடங்கவில்லை. இப்பணியை விரைவில் முடிக்க வேண்டும்.

பெங்களூரு- எர்ணாகுளம் ரயில் எண்.12677 மற்றும் எர்ணாகுளம்- பெங்களூரு எண். 12678 ஆகிய ரயில்கள், பாலக்கோடு ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இந்த ரயிலை பாலக்கோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். அதியமான்கோட்டையில், வரலாற்று சிறப்பு மிக்க காலபைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே, அதியமான்கோட்டையில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். தர்மபுரி ரயில் நிலையத்தில் இரண்டாம் நடைமேடையில் பயணிகள் ரயில் நிற்கும்போது லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். கட்டண கழிப்பிடம் 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் எண் நடைமேடையில் மேலும் ஒரு கழிப்பிடம் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri DMK ,Railways General Manager ,
× RELATED சமஸ்கிருதத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.