×

திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் வசதி

திருவில்லிபுத்தூர், அக்.18: திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.  நோயாளிகளின் உடன் வந்தவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.பெரும்பாலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியில் படுத்திருப்பது அல்லது வராண்டாவில் படுத்திருப்பது அல்லது வேறு வழியில்லாமல் வீட்டுக்கு செல்வது என்ற நிலையே நீடித்து வந்தது. எனவே நோயாளிகளுடன் இருப்பவர்கள் தங்குவதற்கு மருத்துவமனை வளாகத்தில் இடவசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு ஆன்மீக வளர்ச்சி பேரவை சார்பில் சுமார் ரூ.3 லட்சம் செலவில் மருத்துவமனை வளாகத்தில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பெறுபவர்களின் நோயாளிகள் 24 மணி நேரமும் தங்கியிருக்கலாம். குடிநீர் மற்றும் காற்றோட்ட வசதி, கழிப்பிட வசதி அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான துவக்கவிழா நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காளிராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆன்மீக வளர்ச்சி பேரவை செயலாளர் வேத பிரான் பட்டர் சுதர்சன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதில் ஆண்டாள் கோவில் மணியம் கோபி பட்டர் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvilliputhur Government Hospital ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...