×

அனைத்து வட்டாரங்களிலும் நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும் விவசாயிகள் ஆவேசம்

திண்டுக்கல், அக். 18: அனைத்து வட்டாரங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உயர் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா தலைமை வகிக்க, கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மங்கத்ராமா பேசுகையில், ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து வட்டாரங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். நிவாரண முகாம்கள், முதல் தகவல் பொறுப்பாளர்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் உடனுக்குடன் அகற்றிட வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் கொசு மருந்து தெளித்து தடுத்திட வேண்டும். குடிநீர் விநியோகத்தின் போது சரியான அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்திட வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில் தேவையான அளவு மருந்துகளையும், நடமாடும் மருத்துவ வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.வருவாய்த்துறையின் சார்பில் தமிழக அரசால் பட்டாக்கள் வழங்கிட அனுமதி அளிக்கப்பட்ட அளவினை விரைவில் எய்திடவும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி, கண்மாய் மற்றும் குளங்களை தூர்வாரி பராமரித்திடவும், மீண்டும் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் கண்காணித்திடவும், குடிமராமத்து திட்டப்பணிகளை விரைந்து முடித்து மழைநீரினை சேகரித்திட வேண்டும்’ என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், பழனி சார் ஆட்சியர் உமா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் மற்றும் அனைத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மங்கத்ராம் சர்மா, வடமதுரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்து, சுகாதாரநிலை குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தாமரைப்பாடி அம்மாகுளம் கண்மாய், சேக்ராவுத்தர் குளம் மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் வேல்வார்கோட்டை பெரியகுளம் கண்மாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Tags : relief camps ,regions ,
× RELATED நொய்யல் நீரை குளங்களுக்கு கொண்டு...