×

விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு 9.53 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

திருவண்ணாமலை, அக்.18: திருவண்ணாமலை அருகே விபத்தில் பலியான கல்லூரி மாணவி குடும்பத்திற்கு 9.53 லட்சம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(48), சத்துணவு அமைப்பாளர். இவரது மகள் சவுமியா(21). இவர் திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி சவுமியா செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பஸ்சில் தனது தந்தை செல்வத்துடன் கல்லூரிக்கு சென்றார்.

செங்கம் அடுத்த இறையூர் கிராமம் அருகே சென்ற போது, எதிரே வந்த கர்நாடக அரசு பஸ்சுடன், இவர்கள் சென்ற பஸ் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வம், சவுமியா உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். சவுமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், செல்வம் கடந்த 2011ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் ₹9.53 லட்சத்தை இழப்பீடாக ஒரு வாரத்திற்குள் வழங்கவேண்டும், இல்லையெனில் அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது.

ஆனால், போக்குவரத்து கழகம் சார்பில் இதுவரை சவுமியா குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவின்படி திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பெங்களூரு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர் பன்னீர்செல்வம் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றார். இச்சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : deaths ,college student accident ,
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...