×

காப்பீட்டு தொகை ரூ.269 கோடி அறிவித்து ஒரு மாதமாகியும் இன்னும் கிடைக்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

தஞ்சை, அக். 18: தஞ்சை மாவட்டத்துக்கு காப்பீட்டு தொகை ரூ.269 கோடி அறிவிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் கிடைக்கவில்லையென கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தவச்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளின் விவாதம் வருமாறு: அம்மையகரம் ரவிச்சந்தர்: கூட்டத்தில் திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, தஞ்சை தாசில்தார்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். 3 ஆண்டுகளாக பல்வேறு குளறுபடி மோசடி செய்து வரும் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பூதலூர், கோவில்பத்து விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பில்லை என தர மறுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பயிர் காப்பீடு தொகை கிடைத்துள்ள விவசாயிகளின் கடனில் வரவு வைக்கக்கூடாது.

தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருவதால் நெல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் திருப்பந்துருத்தி சுகுமாரன்: தஞ்சை மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அறுவடை ஆய்வு பணி முடிந்து 21 நாட்களுக்குள் வழங்க வேண்டும். பயிர் இழப்பீட்டுத்தொகை இதுவரை 8 மாதமாகியும் வழங்கவில்லை. தற்போது காப்பீடு தொகை கிடைக்க பெற்றவர்களின் வெளியிடப்பட்ட பட்டியலில் தஞ்சை மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு மேல் காப்பீடு தொகை பட்டியலில் பெயர் விடுப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்தவர்களின் பெயர், முகவரியை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 2019ம் ஆண்டு குறுவை நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த விவசாயிகளுக்கு நெல்லுக்குரிய தொகை ஒரு மாதமாகியும் வழங்கவில்லை. இதை உடனே வழங்க வேண்டும்.

கோனேரிராஜபுரம் வீரராஜேந்திரன்: தஞ்சை மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் 2018ம் ஆண்டு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பாவில் 1,42,846 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். இதில் 2,494 பேர் விடுப்பட்டுள்ளனர். நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தால் தஞ்சை மாவட்டத்துக்கு 2018 ரபி பருவத்துக்கு ரூ.269.59 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்றோடு 25 நாட்களாகி விட்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு உரிய தகவலும், காப்பீட்டு தொகையும் இன்று வரை கிடைக்கவில்லை. காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட பட்டியலை வெளியிட வேண்டும். இதில் வெளிப்படை தன்மையில்லை. இது பல முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த நிலை மாற வேண்டும். இந்த பயனாளிகள் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றார்.

Tags : meeting ,
× RELATED 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்