×

பெரிஞ்சேரி ஊராட்சியில் பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்

ஊத்துக்கோட்டை, அக். 18: பெரிஞ்சேரி  ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல்   உள்ள சேவை மைய கட்டிடத்தை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஊத்துக்கோட்டை அருகே பூண்டி  ஒன்றியம் பெரிஞ்சேரி   ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் பிறப்பு, இறப்பு சான்றுகள், திருமண நிதி உதவி மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்று ஆகியவைகள் பெற ஊத்துக்கோட்டையில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்று வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே இப்பகுதியில்  சேவை மையக்கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி  மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி 13 லட்சம் செலவில் சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த   2013-2014ம் ஆண்டு  பணிகள் முடிவடைந்தது.  அதன் பிறகு 5 ஆண்டுகளாக கட்டிடத்தை திறக்காமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது.  எனவே,  சேவை மையத்தை விரைவில் திறக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பெரிஞ்சேரி   ஊராட்சியில்  சேவை மைய கட்டிடம்  பணிகள் முடிந்து 5 வருடங்கள்  ஆகிறது. ஆனால், இதுவரை அந்த கட்டிடம்   திறக்கப்படவில்லை. இந்த கட்டிடத்தை சுற்றிலும் புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. மேலும், இந்த புதர்களால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இந்த  கட்டிடத்தை   விரைந்து திறக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Village Service Center Building ,Peringari Panchayat ,
× RELATED வடபொன்பரப்பியில் சமூக விரோதிகளின் கூடாரமாகிய கிராம சேவை மைய கட்டிடம்