×

ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை

திருப்போரூர், அக்.18: திருப்போரூரில் ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்போரூர் அபிராமி நகரில் வசிப்பவர் ஆதிமூலம். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுவர். இவர் தனது மனைவி, மகனுடன் வசிக்கிறார். அவரது மகன் தயாநிதி நேற்று முன்தினம் இரவு  திருப்பதி சென்று விட்டு இரவு 12 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, கதவை திறந்த ஆதிமூலம் சரியாக தாழ்ப்பாள் போடாமல் உள்ளே சென்று  தூங்கி விட்டார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்மநபர்கள், படுக்கையறையில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த இரண்டரை சவரன் செயின், ஒரு வெள்ளி விளக்கு, ₹4900 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

* திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. விவசாயி. இவரது மனைவி வசந்தி. நேற்று முன்தினம் இரவு கோவிந்தசாமி, குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில், திடீரென வசந்தி அலறி கூச்சலிட்டார். இதை கேட்டு கோவிந்தசாமி எழுந்தபோது, மர்மநபர் வசந்தியின் கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை பறித்தான். வசந்தி செயினை இழுத்து பிடிக்கும்போது, பாதி செயினை கொள்ளையன் பறித்துக்கொண்டு தப்பினான்.
* கண்ணகப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. நேற்று அதிகாலை 5 மணிக்கு தூங்கி எழுந்த ஏழுமலை, அவரது வீட்டு படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால், பொருட்கள் எதுவும் இல்லாததால் கொள்ளையன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது தெரிந்தது.
* திருப்போரூர் திரௌபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். அதே பகுதியில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி அகிலா. நேற்று முன்தினம்  இரவு கண்ணன், வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் திடீரென அகிலா கூச்சலிட்டார். உடனே அவர் எழுந்து பார்த்தபோது அகிலாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி செயினை மர்மநபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பினார்.
புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரிக்கின்றனர். ஒரே இரவில் 4 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பத்தால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
* திருப்போரூர் அடுத்த கொட்டமேடு மற்றும் மயிலை கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வீடுகளில் இருந்து ஆடு, மாடுகள் திருடு போயின. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் திருப்போரூர் போலீசில் புகார் அளித்தனர். அதில், மயிலை பகுதியைச் சேர்ந்த பக்தவச்சலம் (42) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தனர்.
இதனால், பயந்து போன பக்தவச்சலம், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை மயிலை பகுதியை ஒட்டிய வயல்வெளி பகுதியில், வாயில் நுரை தள்ளிய நிலையில் பக்தவச்சலம் சடலமாக கிடந்தார். அதிகாலையில் விவசாய நிலங்களுக்கு சென்றவர்கள், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து திருப்போரூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் அபிராமி நகரை சேர்ந்தவர் உமாபதி (44). செங்கல்பட்டு கால்நடைத்துறை அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு த்ரிஷா (20), பிரியா (16) ஆகிய மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக உமாபதி மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இதையொட்டி, மனைவி, குழந்தைகள் இவரை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்களுக்கு முன் விஜயா, தனது மகள்களுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவர்கள் திரும்பி வராததால் மனமுடைந்த, உமாபதி, சில நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து நேற்று அதிகாலை கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் உமாபதி வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, உமாபதி தூக்குப்போட்டு சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* திருப்போரூர் அருகே கொட்டமேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (எ) டைல்ஸ் ரவி. கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் பெங்களூரில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். இந்நிலையில் சொந்த ஊரான கொட்டமேடு கிராமத்தில் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக கடந்த ஜூலை 29ம் தேதி ரவி அவரது மனைவி ஆனந்தி (43), மகள் தீபிகா (18), உறவினர் சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த ரேவதி (42) ஆகியோர் கொட்டமேடு கிராமத்துக்கு வந்தனர். அன்று இரவு ஆனந்தி, தீபிகா, உறவினர் ரேவதி (42) ஆகியோர் ஒரே மொபட்டில் சிறுங்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டனர். சிறுங்குன்றம் அருகே வனப்பகுதி வழியாக சென்றபோது, பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், 3 பேரையும் தாக்கி ஆனந்தி மற்றும் ரேவதி ஆகியோர் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு தப்பினர்.

இதில் ஆனந்தி மர்மநபர்களுடன் போராடியதில், அவர்களின் செல்போன் கீழே விழுந்தது. இதையடுத்து மூவரும் திருப்போரூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களது செல்போனை வைத்து விசாரித்தனர். அதில், பரனூரைச் சேர்ந்த பிரபல ஹெல்மட் கொள்ளையன் ராஜேஷ் (40) என தெரிந்தது. அவன் வைத்திருந்த மற்றொரு செல்போன் எண்ணை வைத்து கடந்த 3 மாதங்களாக ஸ்ரீபெரும்புதூர், வந்தவாசி, காஞ்சிபுரம், சென்னை உள்பட பல இடங்களில் அவனது செல்போன் சிக்னல் மூலம் தேடி வந்த போலீசார் நேற்று முன்தினம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் கைது செய்தனர். அவனிடம் இருந்து 13 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags : Robbery ,homes ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...