×

மாவட்டம் முழுவதும் வெளுத்துவாங்கிய மழை தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம், அக்.18: வடகிழக்குப் பருவமழை 17ம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்தது. ஆனால், ஒருநாள் முன்னதாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மதியம் நின்ற சாரல் மழை, மீண்டும் இரவு முதல் நேற்று மாலை வரை காஞ்சிபுரத்தில் மிதமான மழை பெய்தது.  இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் தொடர் மழையால் காஞ்சிபுரத்தில் ஜெம் நகர், ஓரிக்கை மிலிட்டரி சாலையில் உள்ள ஆசிரியர் நகர், ராஜன் நகர், திருவேங்கடம் நகர், காஞ்சிபுரம் மேட்டுத் தெரு, கீரை மண்டபம், செட்டித்தெரு உள்பட பல பகுதிகளில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலையில் ஆறாக தண்ணீர் பெருகெடுத்து ஓடுகிறது.

இதையொட்டி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அவதியடைந்தனர்.
மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ராகவேந்திரா நகர், ரேவதி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதேபோன்று செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், மதுராந்தகம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கூவத்தூர் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே தொடர்ந்து  பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.

குறிப்பாக திருக்கழுக்குன்றம் அடுத்த குழிப்பாந்தண்டலம் அரசுப் பள்ளி வாயிலில் அதிகளவு மழைநீர் தேங்கி குளம்போல் நின்றதால், முழங்கால் அளவு தண்ணீரில் சிரமப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பெய்த இந்த மழையால் ஏரி குளங்களுக்கு மழைநீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : public ,rainwater storms ,district ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...