×

பார்வதிபுரம் முதல் ஒழுகினசேரி வரை நிறுத்தப்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் திணறிய நாகர்கோவில் மழை வெள்ளம் தேங்கும் சாலைகளை மாநகராட்சி கண்டுகொள்ளுமா?

நாகர்கோவில், அக்.18: நாகர்கோவிலில் நேற்று பார்வதிபுரம் முதல் ஒழுகினசேரி வரை நீண்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக காலையில் வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகினர்.நாகர்கோவில் மாநகர பகுதி வழியாக திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலை உள்ளது. இந்த சாலையில் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்னரும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. தினமும் வெட்டூர்ணிமடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று காலையில் இந்த பகுதியில் 8 மணி முதல் மிகுந்த வாகன நெரிசல் ஏற்பட தொடங்கியது. பள்ளி வாகனங்கள், பள்ளி குழந்தைகளை அழைத்து சென்ற இரு சக்கர வாகனங்கள், நாகர்கோவிலிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்கள், கன ரக வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. வாகனங்களின் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சாலையில் இருந்து கீழே இறங்கி நின்றிருந்தனர். அந்த பகுதியில் லாரி ஒன்றும் பழுதடைந்தது போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தியது.பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் இருந்து தொடங்கிய போக்குவரத்து நெரிசல் வடசேரி கடந்து ஒழுகினசேரி வரை நீண்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போலீசார் வெட்டூர்ணிமடம் சந்திப்பு பகுதியில் வந்து நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் உடன் இருந்து போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். போக்குவரத்து போலீசாரை இந்த பகுதியில் காண முடியவில்லை.

வடசேரி, கிருஷ்ணன்கோயில் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று இரு பக்கமும் அணிவகுத்து நின்ற வாகனங்கள் நடுவே சிக்கி திணறியது. போக்குவரத்து நெரிசல் காலை 10 மணிக்கு பின்னரே சீரனாது. வெட்டூர்ணிமடம் பகுதியில் பள்ளி வாகனங்களால் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். நேற்று காலையில் மழையும் பெய்து அந்த பகுதியில் சாலையை தண்ணீர் மூழ்கடித்ததால், சாலையின் ஒரு பகுதியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது, இதுவும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க காரணம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். இதனால் நடந்து சென்றவர்களும், பிரதான சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.நாகர்கோவில் மாநகர பகுதியில் வெட்டூர்ணிமடம், கிறிஸ்துநகர் சந்திப்பு, வடசேரி அசம்பு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலங்களில் வெள்ளத்தில் மிதக்கிறது. மழை வெள்ளம் சாக்கடை தண்ணீரும் கலந்து வடிகாலில் நிறைந்து சாலையில் ஓடுவதால் அந்த வேளையில் போக்குவரத்து தடைபடுகிறது. சாலையோர வடிகால்கள் ஆழப்படுத்தாதது, ஆக்ரமிப்பு போன்றவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.

மழை வெள்ளம் பாயும் வடிகால்களை மழைக்காலம்  துவங்கும் முன்பு ஆழப்படுத்தி முறையாக சீர் செய்யாமல் இருப்பதும் இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நகர பகுதியில் பல பகுதிகளிலும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளன. இதனால் கோட்டார் பகுதியில் இதுபோன்று மூடப்படாத பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். பல பகுதிகளிலும் இதுபோன்ற மூடப்படாத பள்ளங்கள் காணப்படுவதால் மழை வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.இது தொடர்பாக உரிய பராமரிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருப்பதுடன், இது தொடர்பாக மேல் நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பதும் பொதுமக்களை மிகுந்த கவலையடைய செய்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுத்து மாநகர பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் மழை வெள்ளம் தேங்குவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : roads ,Municipality ,Nagercoil ,Parvatipuram ,Oluginaseri ,
× RELATED சிவகங்கை நகராட்சியில் தேங்கும் கழிவு...