×

பண்ருட்டி அருகே திருவாமூரில் சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீர் அரசு பள்ளி மாணவர்கள் கடும் அவதி

பண்ருட்டி, அக். 18: பண்ருட்டி அருகே திருவாமூரில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால் அவ்வழியாக செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பண்ருட்டி அருகே திருவாமூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு காமாட்சிபேட்டை, சமத்துவபுரம், திடீர்குப்பம், சோமாசிப்பாளையம், மணலூர், கிழக்கு மருதூர் ஆகிய கிராமங்களிலிருந்து மாணவ-மாணவிகள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு வருவதற்கான சாலையில் எப்போதுமே தண்ணீர் தேங்கி கிடக்கும். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தும் தேங்கிக் கிடக்கும் நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இந்நிலையில் இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களிலிருந்து கல்வி கற்க வருவதால் இச்சாலை வழியாக நடந்தே வருகின்றனர். தற்போது இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பள்ளி செல்லும் சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையில் சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

 இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் செல்வதன் மூலம் மாணவர்களுக்கு டெங்கு, மர்ம காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பள்ளியின் முன்புறம் மதில் சுவர் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கும், பள்ளிக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதாரமாக வைத்திருக்குமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இப்பள்ளியில் அதுபோன்று எந்த விதிகளும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. எனவே பள்ளிக்கு பாதுகாப்பு சுவர் எழுப்பவும், சாலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றவும் மாணவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : road ,Panrutti ,Thiruvamur ,state ,
× RELATED சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம்...