×

நெருங்கும் தீபாவளி பண்டிகை மாநகரில் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர், அக். 18: தீபாவளி  பண்டிகை நெருங்கும் நிலையில் திருப்பூர் மாநகரில் ஏற்படும் கடும்  போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் ஆரம்பத்திலிருந்தே  போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். திருப்பூர் பகுதியில் பிரதான தொழிலாக பின்னலாடை  தொழில் உள்ளது. பின்னலாடை தொழிலை சார்ந்து இயங்கக்கூடிய நிட்டிங்,  டையிங், வாசிங் யூனிட்கள் உள்ளிட்ட பலவகையான தொழில்கள் நடைபெற்று வருகிறது.  இந்த பின்னலாடை தொழில்களில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டங்கள்  மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் திருப்பூரின் பல  பகுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய  பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்பட  உள்ளது. இதை முன்னிட்டு திருப்பூர்  பகுதிகளில் புத்தாடைகள் வாங்கவும், பல்வேறு பொருட்களை வாங்கவும்  அதிகப்படியான மக்கள் குமரன் ரோடு, குள்ளிசெட்டியார்  வீதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு படையெடுன்ன  துவங்கியுள்ளனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு  சக்கர வாகனங்களை பிரதான ரோட்டின் ஓரங்மாக நிறுத்தி  செல்கின்றனர். இதனால் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. அந்நேரத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட விரைந்து  செல்ல முடியாத நிலை உள்ளது

 இது குறித்து சமூக ஆர்வலர்  சுந்தரபாண்டியன் கூறியதாவது: ‘‘ மாநகரில்  போக்குவரத்து சீர்படுத்துதல் என்பது முற்றிலும் மோசமான நிலையில்தான்  உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் திருப்பூர் மாநகரில் போக்குவரத்து  நெருக்கடி என்பது இந்த அளவிற்கு இல்லை. அப்போதைய போலீஸ் கமிஷனராக  இருந்த நாகராஜன் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுக்கான முன்கூட்டியே  பல்வேறு போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆனால் தற்போது  தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் போக்குவரத்து சீரமைப்பதற்கான  பணி துவங்கவில்லை. குறிப்பாக குமரன் ரோட்டின் இரண்டு  பகுதிகளிலும் பாதசாரிகள் நடந்து செல்ல பாதையை வகுத்து கொடுக்க வேண்டும்.  கடந்த ஆண்டு ரோட்டின் இருபுறமும் ரீப்பர் கட்டைகள் மூலம் பாதசாரிகள்  நடந்து செல்ல பாதை அமைக்கப்பட்டது.

 அதேபோல் மாநகர போலீசார் தீபாவளி சமயங்களில்  போக்குவரத்து நெருக்கடி ஏற்படக்கூடிய பகுதிகளில் வாகனங்களை  நிறுத்துவதற்கென்று தனி இடம்  தேர்வு செய்து அங்கு வாகனங்களை  நிறுத்த அறிவுருத்தனர்.  இந்நிைலயில் இன்றிலிருந்தே (நேற்று)  போக்குவரத்து நெருக்கடி துவங்கிவிட்டது. போலீசாரும் கண்டுகொள்ளாமல்  உள்ளனர்.  மேலும் வாகனங்கள் நிறுத்த இடமில்லாத கடைக்காரர்களிடம் போலீசார்  பணத்தை வாங்கிக்கொண்டு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர். இதுபோன்று இல்லாமல் போலீசார் விழிப்புடன்  செயல்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து போலீஸ்  அதிகாரிகளிடம் கேட்டபோது; ‘‘இது சம்மந்தமாக ஆலோசிப்பதற்காக கூட்டங்கள்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பது  குறித்த ஆலோசனைகளும் உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து  வருகிறது’’ என்றனர்.

Tags : Diwali ,festival ,
× RELATED விபத்தில்லா தீபாவளி மக்கள் மகிழ்ச்சி