×

சூதாடிய 36 பேர் கைது ரூ.38 ஆயிரம் பறிமுதல்

திருப்பூர், அக்.18: திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம், 24 பைக்குகள், 8 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஒருசில பொழுதுபோக்கு விடுதிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாகவும், சில இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும் மாநகர போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.  இது தொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் போலீசார் அவ்வப்போது பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் ஆத்துப்பாளையம் அருகே உள்ள பொழுதுபோக்கு கிளப் ஒன்றில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. ஆனால் அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது  செய்தனர்.  பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து(37), கோவையை சேர்ந்த துரைராஜ் (46) உள்ளிட்ட 36 பேரை இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.38,360 பணம், 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 8 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது