×

வண்டிபாலம் கட்டுவதற்காக தண்ணீர் செல்லாதபடி சுள்ளன் ஆற்றில் அமைக்கப்பட்ட மண் தடுப்புகள் அகற்றம்

வலங்கைமான், அக்.18: வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் சுள்ளன் ஆற்றில் புதிய வண்டிப்பாலம் கட்டும் பணியின்போது ஆற்றில் தண்ணீர் செல்லாத வகையில் தடுக்கப்பட்டிருந்த மண் தடுப்புகளை தினகரன் செய்தி எதிரொலியாக அப்புறப்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்சங்கலம் கிராமத்தையும், அதே ஊராட்சியை சேர்ந்த வேதாம்பரை கிராமத்தையும் இணைக்கும் சுள்ளன் ஆற்றில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறிய நடைபாலம் முற்றிலும் பழுதடைந்ததால் ஊரக வளர்ச்சித்துறை மூலம் சுள்ளன் ஆற்றில் சுமார் நாற்பது மீட்டர் நீளத்துடன், ஏழரை மீட்டர் அகலத்துடனும் ஐந்து கண்வாய்களுடன் நபார்டு திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 48 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வண்டிபாலம் கட்ட நிர்வாக அனுமதி பெறப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிய வண்டிபாலம் அமைக்கும் பணி துவங்கியது. முன்னதாக பழைய நடைபாலம் இடிக்கப்பட்டு அதே பகுதியில் புதிய வண்டிபாலம் கட்டும் பணி துவங்கியது. இரண்டுமாத காலமாக பாலத்தின் அடித்தளம் அமைப்பதற்காக அமைக்கப்படும் சுற்றுசுவர் வேலை மட்டுமே நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் வலங்கைமான் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 20 செ.மீ அளவு மழைபெய்தது. மழைநீர் மற்றும் குடமுருட்டிஆறு மற்றும் வெட்டாறு பிரிவு வாய்க்கால்களில் வரும் உபரிநீர் சுள்ளன் ஆற்றில் வருவதால் புதிய வண்டிபாலம் கட்டும் இடத்தின் இருபுறங்களிலும் தண்ணீர் செல்லாத வகையில் மணலால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாலம் கட்டும் கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல வசதியாக ஆற்றின் கரைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தெற்கு புறத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறியஅளவிலான மாற்று பாதை வழியே தற்போது தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சுள்ளன் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. மேலும் வெட்டாறு மற்றும் குடமுருட்டி ஆற்றுக்கும் இடையே உள்ள சுள்ளன் ஆற்றில் 5ஆயிரம் எக்டேர் விளைநிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் மற்றும் உபரிநீர் சுள்ளன் ஆற்றில் செல்லவேண்டிய நிலை உள்ளது.

இதனால் வண்டிப்பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், ஏற்கனவே ஆற்றில் தண்ணீர் செல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள மண் தடுப்புகளை உடனே அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை செய்தி தினகரனில் கடந்த 14ம்தேதி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம் ஆற்றில் தண்ணீர் செல்லாதவாறு இருந்த மண் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டது.மேலும் பாலம் கட்டும் இடத்தில் வடக்குப்புறத்தில் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்காக திறக்கப்பட்டிருந்த திறப்புகள் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக தெற்குப்புறத்தில் ஆற்றுநீர் செல்லும் விதமாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய பாதையும் தினகரன் செய்தி எதிரொலியாக அடைக்கப்பட்டது. தினகரன் செய்தி எதிரொலியால் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து தீர்வு காணப்பட்டதற்காக தினகரனுக்கும், ஊரக வளர்ச்சித்துறைக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Sullen River ,bridge ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!