×

சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து மறியல்

ஊட்டி, அக். 18: மஞ்சனக்கொரை  செல்லும் சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஊட்டி  நகராட்சிக்குட்பட்ட மஞ்சனக்கொரை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்களும். அன்பு அண்ணாக் காலனி, ரிச்சிங் காலனி பகுதியில் 500க்கும்  மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் நாள்தோறும் அனைத்து  தேவைகளுக்கும் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஊட்டி நகருக்கே வரவேண்டும்.  ஆனால் ஊட்டியில் இருந்து மஞ்சனக்கொரை செல்லும் சாலை மிகவும்  பழுதடைந்து பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால்,  இவ்வழித்தடத்தில் சிறிய வாகனங்கள் செல்லும்போது பழுதடைந்து  நின்று விடுகிறது. மேலும், எந்த ஒரு அவசர தேவைகளுக்கும் இந்த பகுதிக்கு  ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட மறுப்பதால் இப்பகுதி மக்கள்  கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க கோரி கடந்த 5  ஆண்டகளாக இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.  ஆனால், சாலைைய சீரமைக்க நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளும்  மேற்கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மஞ்சனக்கொரை பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று ஊட்டி - இத்தலார் சாலையில் திடீர் சாலை  மறியலில் ஈடுபட்டனர். இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனை தொடர்ந்து ஊட்டி நகராட்சி கமிஷ்னர் நாராயணன் அப்பகுதிக்கு சென்று  பொதுமக்களை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால், பொதுமக்கள் அவரை  முற்றுகையிட்டு சாலையை உடனடியாக சீரமைக்கப்படும் என  உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். அங்கு  வந்த ஊட்டி ஜி1 இன்ஸ்பெக்டர் விநாயகம் பொதுமக்களை சமாதானம் செய்தார். பின்னர்,  கமிஷ்னர் நாராயணன், இரு நாட்களுக்குள் இச்சாலை சீரமைப்பு பணிகள் துவங்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட  பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...