வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலைய சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

சீர்காழி, அக்.18: வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலைய சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பக்தர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதசுவாமி தையல்நாயகி அம்பாள் உடனாகிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இத்தகைய புகழ்பெற்ற கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து நிலையம் நுழைவாயிலில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெங்கு நோய் பரவி வரும் நிலையில், வைதீஸ்வரன் கோவிலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி வைத்தீஸ்வரன்கோயில் பேருந்து நிலையம் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>