×

மருத்துவக் கல்லூரிக்கு மாற்று இடத்துக்காக கொடநாடு எஸ்டேட்டில் ஆக்கிரமித்துள்ள அரசு இடத்தை கையகப்படுத்த வேண்டும்

ஊட்டி, அக்.18: நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊட்டி அருேகயுள்ள எச்பிஎப் பகுதியில் அமைக்கப்படும் என நமக்கு நாமே திட்டத்தில் நீலகிரிக்கு வந்த ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது நீலகிரி எம்.பி. ராசா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதற்கான குறிப்புகளை வழங்கியதன் விளைவாக தற்போது மத்திய அரசு தமிழகத்தில் அமையவிருக்கும் மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் நீலகிரியும் இடம் பெற்றுள்ளது. இது இம்மாவட்ட மக்களுக்கு மகிழ்வை அளித்துள்ளது. இதற்காக, எச்பிஎப் தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டிடத்தையும், காலி இடங்களையும் முழுமையாக பயன்படுத்திட வேண்டும் என கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக நீலகிரி மாவட்ட தி.மு.க. உட்பட அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.  

எச்பிஎப் தொழிற்சாலை நிலத்தில் குறிப்பிட்ட பகுதிகள் தமிழக வனத்துறைக்கு சொந்தமானதாகும். இந்த இடத்தை தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைத்திட பயன்படுத்த எடுத்துக்கொள்ள உள்ள நிலையில், இதற்கு மாற்று இடத்தை வனத்துறைக்கு கொடுக்க வேண்டும். இதற்காக, கீழ்கோத்திகிரி பகுதியில் உள்ள மேல்ஓடேன், கீழ்ஓடேன், ஜக்கலோடை, உல்லத்தட்டி ஆகிய கிராம பகுதிகளில் உள்ள படுகர் சமுதாய மக்கள் பாரம்பரியமாக 100 ஆண்டுக்கும் மேலாக சிறு விவசாயம் செய்து தங்கள் அனுபோகத்திலுள்ள நிலங்களை மாற்று இடமாக கையகபடுத்த ஆட்சியாளர்கள் முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இது தவறானதாகும். தற்போதைய ஆட்சியாளர்கள் நினைத்தால் ஊட்டி எச்பிஎப் நிலத்திற்கு பதில் மாற்று இடம் கொடுக்க அவசியம் இல்லை என்ற நிலை எடுக்கலாம். அப்படி மாற்று இடம் கொடுத்தே தீரவேண்டும் எனில், கொடநாடு - கர்சன் எஸ்டேட் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள இடங்களையோ, வேறு தனியார் எஸ்டேட் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள அரசு இடங்களையோ வனத்துறைக்கு ஒப்படைக்கலாம். அதேநேரத்தில், பிரச்சனைகளுக்குரிய இடங்களை கையகப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு, எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாத நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும். இவ்வாறு முபாரக் கூறியுள்ளார்.

Tags : Acquisition ,land ,Government ,Kodanad Estate ,Medical College ,
× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்