×

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை கேட்டரிங் நிறுவனம், வீடுகளில் ஆய்வு

ஈரோடு, அக். 18: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த கலெக்டர் கதிரவன், ஆணையாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று 75 வீடுகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் குறைபாடு உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனம், டாஸ்மாக் கடை பார் மற்றும் வீடுகள் என ரூ.1.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர, ஈரோடு மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்திக்கான காரணிகள் உள்ளதா? என்பது குறித்து கண்டறிந்து அதை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், தொழி்ற்சாலைகளிலும் ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள 130 தனியார் மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினர். இதில், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்திற்குட்பட்ட மூலப்பாளையம் எல்.ஐ.சி.நகர், நேருஜி வீதி, பாரதிநகர், தீரன்சின்னமலை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று ஆய்வு நடந்தது. இதில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி ஆணையர் அசோக்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுமதி, சுகாதார அலுவலர் ஜாகிர்உசேன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு வீடுகளிலும் டெங்கு கொசுவை பரப்பும் புழுக்களை உற்பத்தி செய்யும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்பது குறித்து பார்த்தனர். மேலும், வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளை திறந்து, அதில் புழுக்கள் ஏதும் உள்ளதா? என ஆய்வு செய்தனர். வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ்களையும் திறந்து பார்த்து அதில் டெங்கு புழுக்கள் உள்ளதா? என கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார். தரைமட்ட தொட்டிகளில் கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் துணியை கொண்டு மூடி வைக்க வேண்டும் என்றும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், மழைநீர் மற்றும் தண்ணீர் தேங்காத வகையில் வைத்துக் கொள்ளவும் வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஈரோடு மூலப்பாளையம் நேருஜிவீதியில் தனசங்கர் என்பவர் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இங்கிருந்து பல ஓட்டல்களுக்கு பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் சப்ளை செய்யப்படுகிறது. இந்த கேட்டரிங் நிறுவனத்தில் கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தபோது, அங்கு சுகாதாரமற்ற முறையில் பாத்திரங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், பல பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த நீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கேட்டரிங் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னர், மூலப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு காலி மதுபாட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டில்களில் மழையால் தேங்கியிருந்த நீரில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த டாஸ்மாக் பாருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 3 நாட்களுக்கு பாரை சீல் வைக்கவும், இதை சரி செய்த பிறகு திறக்கவும் வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

நேற்று மாநகராட்சி 4வது மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 75 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் இருந்தது தொடர்பாக ரூ.1.70 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் கதிரவன் கூறுகையில்,`ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 17 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சுகாதார அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன் குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : company ,inspection ,homes ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...