×

இன்று சுட்டுக் கொல்லப்பட்ட தினம் வீரப்பனிடம் சிக்கியது எப்படி?

சத்தியமங்கலம், அக்.18:  இன்று அக்.18 சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட தினம். வீரப்பன் வழக்கில் 18 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலை பெற்று வந்த அவரது கூட்டாளி துப்பாக்கி சித்தன் வீடு இல்லாமல் வறுமையில் தவித்து வருகிறார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி சோளகர் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் துப்பாக்கி சித்தன் (68). இவரது மனைவி கும்பி (57). சோளகர் என்னும் பழங்குடியினத்தை சேர்ந்த இவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் வனத்தில் தீ ஏற்படாமல் தடுப்பதற்காக தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி செய்து வந்தார். அப்போது, தாளவாடியில் நடந்த மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவிற்கு சென்ற துப்பாக்கி சித்தனை போலீசார் பிடித்து வீரப்பனுக்கு உதவி செய்கிறாயா? என விசாரித்தனர். அப்போது போலீசார் பிடியில் இருந்து தப்பி வந்த துப்பாக்கி சித்தன், தனது மனைவி கும்பியுடன் வனப்பகுதியில் மறைந்து வாழ்ந்தார். அப்போது, வீரப்பன் கும்பலிடம் எதிர்பாராதவிதமாக சிக்கியதாக தெரிவித்தார்.

இது குறித்து துப்பாக்கி சித்தன் கூறியதாவது: போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக தாளவாடி வனப்பகுதியில் நானும் எனது மனைவி கும்பி இருவரும் வனப்பகுதியில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் கும்பலிடம் சிக்கிக்கொண்டோம். வீரப்பன் என்னைப்பற்றி விசாரித்தபோது என்னை வீரப்பனுக்கு உதவி செய்ததாக கூறி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதையும், அங்கிருந்து தப்பி வந்து வனப்பகுதியில் மறைந்து வாழ்ந்ததையும் தெரிவித்தேன். வனத்தை விட்டு வெளியேறினால் போலீசிடம் சிக்குவோம், வனப்பகுதியில் வீரப்பனிடம் மாட்டிக்கொண்டதால் இருதலைக்கொள்ளி எறும்பாக சிக்கித் தவித்தேன். அப்போது, வீரப்பனுடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் இருந்தனர். வீரப்பன் எங்களை நல்லபடியாக பார்த்துக்கொண்டார்.இதையடுத்து வீரப்பன் கும்பலுக்கு சமையல் செய்யும் பணியை நானும் எனது மனைவியும்  செய்து வந்தோம்.

சுமார் ஒன்றரை ஆண்டு காலம் வீரப்பனுடன் இருந்த நான், இன்னும் எத்தனை ஆண்டுகாலம் வீரப்பனுடன் இருப்பது என நினைத்து வீரப்பன் கும்பலிடம் இருந்து வெளியேறி சென்னையில் சரணடைந்தேன். பின்னர், என்னை கோவை சிறையில் பல ஆண்டுகளும், மைசூர் சிறையிலும் அடைத்தனர். எனது மனைவியை கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர். 18 ஆண்டு காலம் சிறைவாசத்தில் இருந்த என்னை, கடந்த 2016ம் ஆண்டு மைசூர் சிறையிலிருந்து  நன்னடத்தை காரணமாக கருணை அடிப்படையில் விடுதலை செய்தனர்.தற்போது, எனது உடல்நிலை அவ்வப்போது சரியில்லாம்ல போவதால் என்னால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியவில்லை. எனது மனைவி கும்பி கூலி வேலை செய்வதால் வரும் வருமானத்தை கொண்டு இருவரும் வாழ்ந்து வருகிறோம்.  எனக்கென சோளகர்தொட்டியில் இருக்கும் இடத்தில் வீடு கட்ட வேண்டும். இதற்கென கடந்தாண்டு வீடு கட்டுவதற்கான பணியை தொடங்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் என்னால் வீடு கட்டமுடியவில்லை. எனக்கு எந்த வருமானமும் இல்லாததால் அரசு வீடு கட்டித்தரவேண்டும். இவ்வாறு துப்பாக்கி சித்தன் கூறினார்.

Tags : Veerappan ,
× RELATED கயத்தாறு அருகே லாரி மீது வேன் மோதி நெல்லை தொழிலதிபர் பலி