×

தீபாவளி போனஸ் வழங்க நெசவாளர்கள் கோரிக்கை

பவானி, அக். 18:  பவானியில் கைத்தறிகளில் பணியாற்றும் ஜமக்காள நெசவுத் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கைத்தறி நெசவு கூடங்கள் உள்ளன. இதில், ஏராளமான கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால், இந்தாண்டு கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்காமல் கைத்தறி நெசவு கூட உரிமையாளர்கள் இழுத்தடித்து வருகின்றனர். தீபாவளிக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் இன்னும் போனஸ் வழங்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கைத்தறிக் கூட உரிமையாளர்களுடன் தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம் பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாய தொழிலாளர் சங்கம் ஏஐடியுசி சார்பில் கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு நேற்று அளிக்கப்பட்டது.கடந்தாண்டு ஹால் கார்பெட் தறித் தொழிலாளர்களுக்கு ரூ.2,525 போனசாக வழங்கப்பட்டது. தற்போது, ரூ.175 சேர்த்து மொத்தம் ரூ.2,700 வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கைத்தறிக் கூட உரிமையாளர்கள் வழங்க மறுப்பதால் இழுபறி நீடித்து வருகிறது. போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...