×

திருப்பூரில் நாளை அம்மா திட்ட முகாம்

திருப்பூர், அக். 17: திருப்பூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நாளை (18ம் தேதி) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டமான ‘அம்மா திட்டம்”  ஆறாம் சுற்று முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கடந்த 24.08.2018 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (18ம் தேதி) திருப்பூர் வடக்கு பொங்குபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், திருப்பூர் தெற்கு நல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், அவிநாசி போத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், ஊத்துக்குளி  வேலம்பாளையம் இ-சேவை மையத்திலும், பல்லடம் பூமலூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், தாராபுரம் கண்ணாங்கோவில் கிராம நிர்வாக அலுவலகத்திலும், காங்கயம் முத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், உடுமலைபேட்டை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் மடத்துக்குளம் கொமரலிங்கம் மேற்கு சமுதாய நலக்கூடத்திலும் ஆக 9 இடங்களில் முகாம் நடக்க உள்ளது.

இந்த முகாமில் வருவாய்த்துறையை சேர்ந்த வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், நில வருவாய் ஆய்வாளர், நில அளவைத்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், வளர்ச்சித்துறையை சேர்ந்த அலுவலர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை தொடர்பான மனுக்களைப் பெற்று அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் உடனடியாக முடிவெடுக்க இயலாத கோரிக்கைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

Tags : Mama Project Camp ,Tirupur ,
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...