×

வங்கி கடன் செலுத்த முடியாத தொழில் நிறுவனங்களில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

திருப்பூர், அக். 17:  ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள்  ஆயிரக்கணக்கில் இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு  வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வங்கிகள்  பல்வேறு வகையில் உதவிகரமாக உள்ளன. திருப்பூர் உள்ளிட்ட இந்திய பனியன் நகரங்களில் இருந்து கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடிக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி  செய்யப்பட்டுள்ளன. இதில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களின் பங்கு  ரூ.26 ஆயிரம் கோடி. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுடைய பல  கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வங்கிகளில் அடமானம் வைத்துதான், கடன்  வாங்கியுள்ளனர். இந்நிலையில், தொழில் நெருக்கடியால் பல்வேறு நிறுவனங்கள், 3  மாதம் வட்டி, அசல் தொகை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. ஆனால், வங்கி அதிகாரிகள் இதுபற்றி பரிசீலிக்காமல், அதிரடியாக ஜப்தி நடடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தற்போது, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும்  இடையிலான வர்த்தக நிச்சயமற்ற தன்மையால் பல அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஆடை  உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் பின்னலாடை  ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கிகள் ஆதரவு அளித்தால், உள்ளூரில் தொழில் வளம் பெருகவும், வங்கிகளின் கடனை திருப்பி செலுத்தவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது தொழில்முனைவோர்களின் கருத்து.

ஆனால், இதை வங்கிகள் பரிசீலனை செய்யாமல் இருப்பது, ஏற்றுமதி நிறுவனங்களில் வளர்ச்சிக்கு  தடையாக இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய தேக்க நிலையில்  இருந்து புத்துயிர் பெறுவதற்கும், பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை  அதிகரிப்பதற்கும் பல்வேறு உத்திகளை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செய்து  வருகிறது. இதை கருத்தில்கொண்டு வங்கிகள், ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு, திருப்பூர் தொழில்  நிறுவனங்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை, மத்திய நிதியமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால், திருப்பூர் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:தொழில்  நிறுவனங்கள் தங்களுடைய பல கோடி மதிப்புள்ள சொத்துகளை அடமானம் வைத்துதான்  கடன் வாங்குகின்றனர். ஒரு கோடி ரூபாய் கடனுக்காக இரண்டு கோடி மதிப்புள்ள  சொத்தை அடமானம் வைத்துள்ளனர். மூன்று மாதங்கள் அசல், வட்டி  கட்டவில்லையெனில் வங்கிகள் வராக்கடனாக அறிவித்து சொத்துகளை ஜப்தி செய்யும்  நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால், தொழில் நிறுவனங்களை தொடர்ந்து இயக்க  முடியாமல் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.  தொழில் நிறுவனங்களில் வளர்ச்சிக்கு வங்கிகள் உதவிகரமாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சொத்துகளை ஜப்தி செய்வதில் வங்கிகள் தீவிரம்  காட்டுகின்றன. இதை, தவிர்க்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சருக்கு  தொழில் நிறுவனங்களின் சார்பில் கோரிக்கை வைத்திருந்தோம். கோரிக்கையை ஏற்று  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஜப்தி நடவடிக்கை தவிர்க்க, அனைத்து  வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய  நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படும். இவ்வாறு சக்திவேல் கூறினார்.

Tags : JPTT ,banking institutions ,
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ