×

திடீரென இடிந்து விழும் பள்ளியின் மேற்கூறை

திருப்பூர், அக். 17: திருப்பூர் செல்லம்மாள் காலனி மாநகராட்சி பள்ளியின் கட்டிட மேற்கூரைகள் திடீரென இடிந்து விழுவதால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். திருப்பூர் வடக்கு கல்வி வட்டத்திற்குட்பட்ட சாமுண்டிபுரம் அடுத்த செல்லம்மாள் காலனியில் மாநகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் புதியதாக எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகளும் துவங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் பாலமுருகன் நகர், முருகன் காலனி, ராஜீவ் நகர், வளையங்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் சுமார் 280 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் கட்டிடங்கள் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால், கட்டிடங்களில் அனைத்து பகுதிகளிலும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து வருகிறது. இதனால் அந்த பள்ளியில் படிக்ககூடிய மாணவ மாணவிகள் அச்சத்துடன் படித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டாமல் கம்பி வேலியை அமைத்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரங்களில் குடிமகன்கள் கம்பிவேலியை தாண்டி பள்ளிக்குள் சென்று படுத்து தூங்குகின்றனர். இதில் பள்ளியின் கழிவறைப்பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் செல்லக்கூடிய மின் மாற்றி உள்ளது.

இதில் அடிக்கடி மின்சாரம் மிகையாகி தீபொறி கிளம்புவதாக அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் கழிவறை செல்லக்கூடிய குழந்தைகள் பெரிய அளவிற்கு பாதிப்பிற்குள்ளாகின்றனர். இந்த மாநகராட்சி பள்ளியில் பாதுகாப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. இது குறித்து பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது: இப்பள்ளியில் படிக்கும் அனைவருமே 12 வயதிற்குட்ட குழந்தைகள். பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கம்பிவேலியை உடைத்து பள்ளிகளுக்குள் சென்று மது அருந்துகிறார்கள். காலை நேரங்களில் பார்த்தால் பள்ளி வளாகத்திற்குள் மதுபாட்டில்கள் கிடக்கிறது. கல்வியிலும், தேர்சியிலும் சிறந்து விளங்கும் இப்பள்ளி கட்டிடம் பழமையாகி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

இது தொடர்பாக பல முறை கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால் இது வரை எந்த விதமான நடவடிக்கைகளும் இல்லை. இதனால் இந்த பள்ளியில் வளர்ச்சியில் மாநகராட்சியும், பள்ளிகல்வித்துறையும் தனி கவனம் செலுத்தி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
இது பற்றி வட்டார கல்வி அலுவலர் அழகர்சாமியிடம் கேட்டபோது, பள்ளியின் சார்பில் மின்வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் கட்டிடம் சமந்தமாகவும் கோரிக்கை வந்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையிலிருந்து தேவையான நிதி கிடைப்பதில்லை. பொதுமக்கள் பங்களிப்புடன் வேலைகளை செய்யுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கட்டிடத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் தான் பொறுப்பு. மேலும் கட்டிடங்களை தரைமட்டம் செய்து புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Tags : school ,
× RELATED கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க...