×

கோவை மாவட்டத்தில் பேருந்து அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் நவம்பர் முதல் பேருந்தில் செல்ல முடியாது

கோவை, அக். 17: கோவை மாவட்டத்தில் பேருந்து அட்டைக்கு விண்ணப்பிக்காத பள்ளி மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் இலவசமாக பேருந்தில் செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு அரசு பஸ்களில் சென்று வர, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இலவச பேருந்து அட்டை (பஸ் பாஸ்) வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக பஸ்பாஸ் பள்ளி இறுதியாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும் நாட்களில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு உரிய காலத்தில் பஸ்பாஸ் வழங்கப்படுவதில்லை. மேலும், மாணவர்கள் பழைய பஸ்பாஸ் பயன்படுத்தலாம் எனவும், பள்ளி சீருடையில் உள்ள மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் பள்ளி திறந்து பல மாதங்களாகியும் பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு தற்போது வரை அரசின் இலவச பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு அரசு போக்குவரத்து சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, தற்போது வரை இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் முதல் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து முறையான தகவல்கள் பள்ளிகளுக்கு தற்போது வரை செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என சுமார் 90 பள்ளிகள் இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தின் காரணமாக மாணவர்கள் பலர் பஸ் பாஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : district ,Coimbatore ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு