×

மலைப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிப்பு

மேட்டுப்பாளையம்,அக்.17: தமிழக கேரள எல்லைப்பகுதியான அட்டப்பாடி மல்லீஸ்வரர் மலைப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை மன்னார்காடு வனத்துறையினர் அழித்தனர். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மல்லீஸ்வரர் மலையில் சமூக விரோதிகள் கஞ்சா செடிகள் பயிர் செய்துள்ளதாக  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மன்னார்காடு சரக வன அலுவலர் சுனில்குமார் உத்தரவின் பேரில் வனத்துறை ரேஞ்சர்கள் வீரேந்திர குமார் மற்றும் சுஜிதா ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மலையின் தென்மேற்கு பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 465 கஞ்சா செடிகளை வேருடன் பிடிங்கி தீயிட்டு அழித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, தற்போது கஞ்சா பயிர்கள் அழிக்கப்பட்ட இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்திற்கு மேல் இருக்கும். உயரமான மலைப்பகுதிகளில் கண்காணிப்பு குறைவாக இருக்கும் என்பதால் சமூக விரோதிகள் அங்கு கஞ்சா பயிர்களை பயிரிட்டுள்ளனர். சுமார் நான்கரை  மாதங்களுக்கு முன் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருக்கலாம். இந்த பகுதியில் வேறு எங்காவது கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதா? என கண்காணிக்க தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

Tags : cannabis plants ,hills ,
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...