×

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கு நேரடி சேர்க்கை

ஈரோடு, அக். 17: அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு அக்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு சென்னிமலை ரோட்டில் காசிபாளையத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும், கோபிசெட்டிபாளையம் சத்தி-அத்தாணி ரோட்டில் டி.ஜி.புதூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சியாளர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. பொறியியல் தொழிற்பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவியர் நேரடியாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டர், டர்னர் ஆகிய பாடப்பிரிவுகளிலும், கோபியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், மெக்கானிக் ரெப்ரிஜெரேசன் மற்றும் ஏர்கன்டிசனிங், வெல்டர் ஆகிய 4 தொழிற்பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.

இதில், ஆண் பயிற்சியாளர்களுக்கு 14 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண் பயிற்சியாளர்களுக்கு 14 முதல் அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லாமல் சேர்க்கை நடக்கும். இந்த மாணவர் சேர்க்கை வரும் 21ம்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியர் இலவச பயிற்சியுடன் தமிழக அரசால் 500 ரூபாய் உதவிதொகை, இலவச பாடப்புத்தகம், லேப்டாப், சைக்கிள், வரைபட கருவிகள், இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : places ,Government Vocational Training Center ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...