×

பெரம்பலூரில் மின்னல் தாக்கி செல்போன் டவர் கட்டுப்பாட்டு அறையில் ஒயர்கள் கருகியதுமாடு மேய்த்த பெண்ணும் பலி 2 நாளில் 2 பேர் இறந்த பரிதாபம்

பெரம்பலூர், அக். 17: பெரம்பலூரில் நேற்று பெய்த மழையின்போது மின்னல் தாக்கி செல்போன் டவர் கட்டுப்பாட்டு அறையில் ஒயர்கள் கருகின. மேலும் இடிதாக்கி மாடு மேய்த்த பெண்ணும் பலியானார். 2 நாட்களில் மின்னல் தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி சாகுபடி நிலப்பரப்புகளை கொண்ட பகுதியாகும். ஆண்டு சராசரி மழையளவு 861 மில்லி மீட்டராகும். 2017ம் ஆண்டு பருவமழைகள் பொய்த்துப்போய் 1999 முதல் 2019 வரையென 20 ஆண்டுகளில் மிக குறைவாக அதாவது 512 மி.மீ., மழை பெய்ததால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு அதைவிட கொஞ்சம் அதிகமாக பெய்தபோதும் பருவம் தப்பி பெய்து விவசாயிகளை வானம் வஞ்சித்து தான் போனது.
இந்நிலையில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 200 மி.மீ., மழையென ஆண்டு சராசரி மழையில் 25 சதவீத மழை கூட பெய்யாதிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை குறிப்பிட்ட அளவுக்கு பெய்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தன. 8 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 15 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பியிருந்தன. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் மாதங்கள் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் முதல் வாரம் மழை பெய்யாதிருந்தது.

நடப்பாண்டு அக்டோபர் 17ம் தேதி (இன்று) முதல் தான் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்குமென வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 15ம் தேதி முதலே பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 15ம் தேதி கனமழை பெய்தது. ஆனால் இதில் துரதிஷ்டவசமாக பெரம்பலூர் அருகே உள்ள எறையசமுத்திரத்தை சேர்ந்த வேலு (79) என்பவர் அய்யலூர் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி 15ம் தேதி பலியானார். அதே ஊரை சேர்ந்த அருள்மொழி என்பவரது பசு மாடும் கல்பாடி சாலையில் மேய்ந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பலியானது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (16ம் தேதி) மாலை பலத்த மழை பெய்தது. அப்போது வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருநிலா கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி கவிதா (26) என்பவர் வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அதேநேரம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் டவருக்கான கட்டுப்பாட்டு அறையில் இடி தாக்கியது. இதில் அறையிலிருந்த பேட்டரி ஒயர் தீப்பற்றி எரிந்து கருகியது. பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கிய 2 நாட்களில் அடுத்தடுத்து என 2 பேர்களோடு சேர்த்து பசு மாட்டையும் காவு வாங்கி உள்ளது விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Woman karikayyadumadu shepherd girl ,lightning attack ,cell tower tower ,Perambalur ,
× RELATED மின்னல் தாக்கி விவசாயி பலி